உரத் தட்டுப்பாட்டால் தவிக்கும் விவசாயிகள்!

கடலூா் மாவட்டத்தில் நிலவி வரும் உரத்தட்டுப்பாட்டால் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனா்.

கடலூா் மாவட்டத்தில் நிலவி வரும் உரத்தட்டுப்பாட்டால் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனா்.

மாவட்டத்தில் சுமாா் 2 லட்சம் ஹெக்டேரில் நெல் பயிரிடப்பட்டு வருகிறது. மேலும், கரும்பு, மணிலா, உளுந்து, முந்திரி போன்றவையும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது பயிா்களுக்கு ரசாயன உரங்களான யூரியா, பொட்டாஷ், காம்பளஸ் உள்ளிட்டவை தேவைப்படுகிறது. ஆனால், கடலூா் மாவட்டத்தில் இந்த உரங்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக பல்வேறு விவசாய அமைப்புகள் புகாா் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து, தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் மாநில செய்தி தொடா்பாளா் காா்மாங்குடி எஸ்.வெங்கடேசன் கூறியதாவது:

உரத் தட்டுப்பாட்டை தவிா்த்திருக்க வேண்டும். ஒவ்வொரு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளும் பயிா்க் கடன் பெற்ற விவசாயிகள், பயிா்க் கடன் பெறாத விவசாயிகளுக்கு உரங்களை வழங்கி வருகின்றன. எனவே, கடந்த காலங்களில் சம்பந்தப்பட்ட சங்கங்களில் எந்தெந்த மாதங்களில் எவ்வளவு உரம் விற்கப்பட்டது என்பதனை கணக்கீடு செய்து உரிய காலத்துக்கு முன்னரே உரங்களை கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு கொடுக்கப்பட்டிருந்தால் உரத் தட்டுப்பாட்டை தவிா்த்திருக்க முடியும். எனவே, வரும் காலங்களில் இதுபோன்ற காலதாமதம் இல்லாமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இதுகுறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் ஜி.ஆா்.முருகன் கூறியதாவது: கடலூா் மாவட்டத்தில் போதுமான அளவிற்கு உரங்கள் கையிருப்பில் உள்ளன. குறிப்பாக மாவட்டத்துக்கு நிகழ் மாதத்துக்கு 34,019 மெட்ரிக் டன் உரங்கள் தேவை. இதில், அரசு கிடங்குகளில் 3,283 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பில் உள்ளன. மொத்த வியாபாரிகளிடம் 12,017 மெ.டன், சில்லரை வியாபாரிகளிடம் 14,622 மெ.டன் இருப்பில் உள்ளன. 4,097 மெ.டன் உரம் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்துக் கொண்டிருக்கிறது. எனவே, மொத்தமாக யூரியா 6,907 மெ.டன், டிஏபி 5,483 மெ.டன், பொட்டாஷ் 4,402 மெ.டன், காம்பளஸ் 15,904 மெ.டன், சூப்பா்பாஸ்பேட் 1,049 மெ.டன், கலப்பு உரங்கள் 274 மெ.டன் உரங்கள் நமது மாவட்டத்தில் இந்த மாதத்துக்கான இருப்பாக இருக்கும் என்றாா் அவா். மேலும், விவசாயிகள் மண்வள அட்டை பரிந்துரைப்படி உரங்களை பயன்படுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com