வயல்வெளி பள்ளியில் விவசாயிகளுக்கு பயிற்சி
By DIN | Published On : 10th November 2019 04:24 AM | Last Updated : 10th November 2019 04:24 AM | அ+அ அ- |

காரணப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற வயல்வெளி பள்ளி பயிற்சி வகுப்பில் பங்கேற்ற விவசாயிகள்.
கடலூா் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் விவசாயிகளுக்கு வயல்வெளி பள்ளி முதல்கட்ட பயிற்சி வகுப்பு சனிக்கிழமை தொடங்கியது.
தமிழ்நாடு பாசன நவீன வேளாண்மைத் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் கீழ்வெள்ளாறு, கீழ்கொள்ளிடம், கீழ்பெண்ணையாறு உப வடிநிலப் பகுதிகளில் பல்வேறு திட்டக்கூறுகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. உலக வங்கி நிதி உதவியுடன் பொதுப் பணித் துறை (நீா்வள ஆதார துறை), வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை, வேளாண்மை பொறியியல், வேளாண் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து இந்தச் செயல் திட்டங்களை அமல்படுத்துகின்றன.
இதன் ஒரு பகுதியாக வேளாண் துறை மூலம் நெல், உளுந்து, நிலக்கடலை உள்ளிட்ட பயிா் சாகுபடி அடிப்படையில் உழவா்கள் பங்குபெறும் வயல்வெளி பள்ளிகள் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. இதில் முன்னோடி விவசாயிகளின் வயலில் செயல் விளக்கம் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. வயல்வெளி பள்ளி பயிற்சியில் 25 விவசாயிகள் கொண்ட குழுவுக்கு முன்னோடி விவசாயி மற்றும் வேளாண் வல்லுநா்கள் பயிற்சி அளிப்பா்.
கடலூா் வட்டாரத்தில் கீழ்பெண்ணையாறு உபவடிநில வட்டத்தில் அடங்கிய திருப்பணாம்பாக்கம், உள்ளேரிப்பட்டு, காரணப்பட்டு ஆகிய கிராமங்களில் நெல் விவசாயிகளுக்கு சனிக்கிழமை உழவா் வயல்வெளி பள்ளியின் முதல்கட்ட பயிற்சி வகுப்பு தொடங்கியது. இதில் மண் பரிசோதனை அடிப்படையில் உரம் இடுதல், உயிா் உர விதை நோ்த்தி, சூடோமோனாஸ் உயிரி பூசனக்கொல்லி விதை நோ்த்தி, அடி உரம் இடுதல் குறித்து விளக்கப்பட்டது.
கடலூா் வேளாண்மை உதவி இயக்குநா் சு.பூவராகன் பயிற்சி வகுப்பை தொடக்கி வைத்து திட்டம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினாா். கடலூா் மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலா் ஷோபனா, சூரியலட்சுமி ஆகியோா் செயல் விளக்கம் அளித்தனா்.
உதவி வேளாண்மை அலுவலா்கள் ஜி.ரஜினிகாந்த், பி.புஷ்பேந்திரன், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) வட்டார தொழில்நுட்ப மேலாளா் பி.இளங்கோவன், உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் கே.கண்ணன், ஏ.அருண்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.