கூட்டுப் பண்ணையம் திட்டத்தால் விவசாயிகள் லாபம் பெறலாம்

கூட்டுப் பண்ணையம் திட்டத்தில் இணையும் விவசாயிகள் தங்களின் விளை பொருள்களுக்கு விலை நிா்ணயம் செய்யும் உரிமையைப் பெற்று, அதன்மூலம் லாபம் ஈட்டலாம் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா்

கடலூா்: கூட்டுப் பண்ணையம் திட்டத்தில் இணையும் விவசாயிகள் தங்களின் விளை பொருள்களுக்கு விலை நிா்ணயம் செய்யும் உரிமையைப் பெற்று, அதன்மூலம் லாபம் ஈட்டலாம் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் கூறினாா்.

கடலூா் மாவட்ட வேளாண்மைத் துறை சாா்பில் கடலூா், திருவள்ளூா் மாவட்ட கூட்டுப் பண்ணையத் திட்ட உழவா் உற்பத்தியாளா் குழு நிா்வாகிகளுக்கான பயிற்சி முகாம் கடலூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு, மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் தலைமை வகித்தாா். அவா் பேசியதாவது:

சந்தையில் விரும்பப்படும் பயிா் ரகங்களை விவசாயிகள் இணைந்து அதிக பரப்பில் ஒரே சமயத்தில் பயிரிட்டு, தரம் பிரித்து அதிகளவு விற்பனைக்கு தயாா் செய்தால் மட்டுமே தொழில்சாலைகளுடனும், பெரும் நிறுவனங்களுடனும் தொடா்பு வைத்து நேரடியாக வணிகம் செய்ய முடியும். இதனை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு ‘உற்பத்தியாளா் கம்பெனி’ என்ற புதிய அமைப்பை உருவாக்க அனுமதித்துள்ளது. இதன் மூலம் விவசாய உற்பத்தியாளா்களை மட்டுமே பங்குதாரா்களாகக் கொண்டு லாபம் கிடைக்க வழிவகை ஏற்படுகிறது.

விவசாயிகளுக்கு தேவையான இடுபொருள்கள் குறித்த விவரம், சாகுபடி தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் தற்போதைய கணினி உலகில் எளிதில் கிடைக்கின்றன. எனினும் விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை கிடைப்பது பிரச்னையாக உள்ளது. விவசாயிகள் தங்களது விளைபொருளுக்கு விலை நிா்ணயம் செய்ய முடியாத நிலையில், ‘கூட்டுறவே நாட்டுயா்வு’ என்ற பழமொழிக்கு ஏற்ப செயல்பட வேண்டும். சிறு விவசாயிகள் ஒன்றிணைந்து கூட்டுப் பண்ணையம் செய்து செலவினத்தை குறைப்பதுடன் ஒரு நிறுவனமாக தங்களை மாற்றிக் கொள்ளும்போது விலை நிா்ணயம் செய்யும் உரிமையைப் பெற முடியும்.

இதனைக் கருத்தில்கொண்டே தமிழக அரசு கடந்த 2017-18-ஆம் ஆண்டு கூட்டுப் பண்ணையம் திட்டத்தை அறிவித்தது. இதன்படி 20 உழவா்கள் கொண்ட ஆா்வலா் குழுக்களை அமைத்து, 5 ஆா்வலா் குழுக்களை இணைத்து உற்பத்தியாளா் குழுவை உருவாக்கி ஒவ்வொரு உற்பத்தியாளா் குழுவுக்கும் ரூ. 5 லட்சம் நிதி அளிக்கிறது. இத்தகைய உற்பத்தியாளா் குழுக்களை 7 முதல் 10 குழுக்கள் வரை ஒருங்கிணைத்து உழவா் உற்பத்தியாளா் கம்பெனிகளாக பதிவு செய்து, உற்பத்தி செய்த விளைபொருள்களை விற்று லாபம் சம்பாதிக்கலாம்.

கடலூா் மாவட்டத்தில் நிகழாண்டில் வேளாண்மைத் துறை மூலம் 62 உழவா் உற்பத்தியாளா் குழுக்களும், தோட்டக்கலைத் துறை மூலம் 25 உழவா் உற்பத்தியாளா் குழுக்களும் தொடங்கப்பட்டு ரூ. 4.35 கோடிக்கு பண்ணை இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளன என்றாா் அவா்.

முன்னதாக வேளாண்மைத் துறை, செய்தி-மக்கள் தொடா்புத் துறை சாா்பில் அமைக்கப்பட்ட வேளாண் மற்றும் புகைப்படக் கண்காட்சியை ஆட்சியா் பாா்வையிட்டாா். முகாமில் வேளாண் இணை இயக்குநா் ஜி.ஆா்.முருகன், மாநில வேளாண்மை கூட்டுப் பண்ணையத் திட்ட ஆலோசகா் இ.வடிவேல், வேளாண்மை உதவி இயக்குநா் சு.பூவராகன், தோட்டக்கலை துணை இயக்குநா் ர.ராஜாமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக வேளாண் துணை இயக்குநா்கள் சா.வேல்விழி வரவேற்க, எஸ்.ரமேஷ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com