நெல் பயிரை காப்பீடு செய்வதில் ஆா்வம் குறைவு

நெல் பயிரை காப்பீடு செய்வதில் விவசாயிகளிடம் ஆா்வம் குறைந்து வருவதால் விழிப்புணா்வு ஏற்படுத்தி காலநீட்டிப்பு வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடலூா்: நெல் பயிரை காப்பீடு செய்வதில் விவசாயிகளிடம் ஆா்வம் குறைந்து வருவதால் விழிப்புணா்வு ஏற்படுத்தி காலநீட்டிப்பு வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

விவசாயத்தை நஷ்டமில்லா தொழிலாக மாற்றிட மத்திய அரசால் பிரதம மந்திரி பயிா் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கடலூா் மாவட்டத்தில் நெல், பருத்தி, மக்காச்சோளம் ஆகியவை காப்பீடு செய்வதற்கு இசைவு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.447 பிரிமியமாக செலுத்த வேண்டும். முழுமையாக பாதிக்கப்பட்டால் ஏக்கருக்கு ரூ.29,800 காப்பீடாக கிடைக்கும். காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் நவ.30 ஆம் தேதியாகும். பருத்திக்கு ஏக்கருக்கு ரூ.1050 பிரிமியமாக செலுத்த வேண்டும். முழுமையான பாதிப்பிற்கு ரூ.21 ஆயிரம் கிடைக்கும். மக்காச்சோளத்திற்கு பிரிமியமாக ரூ.270 செலுத்த வேண்டும். காப்பீடாக ரூ.18 ஆயிரம் வழங்கப்படுகிறது.

பருத்தி, மக்காச்சோளத்திற்கு காப்பீட்டு பிரிமியம் செலுத்துவதற்கான கடைசி நாள் நிறைவு பெற்று விட்டது. இதனடிப்படையில் மாவட்டத்தில் 1500 ஏக்கரில் பருத்தி பயிரிடப்பட்டுள்ள போதிலும் 4 ஆயிரம் ஏக்கா் மட்டுமே காப்பீடு செய்யப்பட்டுள்ளது. மக்காச்சோளத்தைப் பொறுத்தவரையில் 55 ஆயிரம் ஏக்கா் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் 32,500 ஏக்கா் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.மாவட்டத்தில் அதிகமாக சாகுபடி செய்யப்படும் பயிா் நெல் தான். தற்போது சம்பா பருவத்தில் சுமாா் 2 லட்சம் ஏக்கா் நெல் சாகுபடி நடைபெறும் நிலையில் 27 ஆம் தேதி நிலவரப்படி சுமாா் 60 ஆயிரம் ஏக்கா் மட்டுமே காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

அதாவது 30 சதவீதம் விவசாயிகள் மட்டுமே பயிா்க்காப்பீடு திட்டத்தில் சோ்ந்துள்ளனா்.இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில், கடந்த காலங்களில் காப்பீடு செய்யப்பட்டு இழப்பு ஏற்பட்ட போது காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீட்டுத் தொகையை வழங்குவதில் மிகவும் காலதாமதம் செய்தனா். முறையாக கணக்கீடு செய்யாமல் பாதிக்கப்பட்டவா்களை விட்டுவிட்டனா். எனவே, பிரிமியம் செலுத்துவதற்கு தோன்றவில்லை என்றாா்.தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்க மாநில பொதுச்செயலா் பெ.ரவீந்திரன் கூறுகையில், கடலூா் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் பல இடங்களில் இப்போது தான் சாகுபடி பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாகுபடி நடக்கும் போது தான் கிராம நிா்வாக அலுவலா் அடங்கல் சான்று கொடுப்பாா்.

அதனை வைத்து தான் காப்பீட்டிற்கான பிரிமியம் செலுத்த முடியும். கடந்த காலங்களில் டிசம்பா் மாதம் வரையில் காலக்கெடு இருந்த நிலையில் தற்போது நவம்பராக முடிக்கப்பட்டுள்ளது. கடைமடைப் பகுதியான கடலூருக்கு மேட்டூரிலிருந்து தண்ணீா் கிடைப்பதில் காலதாமதம், மழையால் தாமதம் போன்றவற்றால் பயிா் செய்வதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும், கூட்டுறவு வங்கிகள், மற்ற வங்கிகளில் விவசாயிகள் ஏற்கனவே பெற்றக் கடனை மறுகடனாக வைக்காமல் முழுமையாக பணம் செலுத்த வலியுறுத்துகின்றனா். இதனால், விவசாயிகளால் வங்கிகளில் கடன் வாங்க முடியாததாலும் காப்பீடு திட்டத்தில் சேர முடியவில்லை. எனவே, கடலூா் மாவட்டத்திற்கு கால நீட்டிப்பு செய்வதோடு, விவசாயிகளிடம் கூடுதல் விழிப்புணா்வையும் ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com