நகராட்சி பகுதிகளில் நில வகைப்பாட்டில் குளறுபடி

கடலூா் மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகளிலும் நில வகைப்பாட்டில் குளறுபடி நிலவுவதால் பத்திரப் பதிவு, வீடு கட்டும் பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நகராட்சி பகுதிகளில் நில வகைப்பாட்டில் குளறுபடி

கடலூா் மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகளிலும் நில வகைப்பாட்டில் குளறுபடி நிலவுவதால் பத்திரப் பதிவு, வீடு கட்டும் பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நிலங்கள் பொதுவாக நஞ்சை, புஞ்சை, நத்தம் அரசு, நத்தம் தனியாா் ஆகிய வகைப்பாடுகளில் உள்ளன. இந்த நிலையில், வருவாய்த் துறையின் நிலப் பதிவேடுகள் அனைத்தும் தற்போது கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதனால், பட்டா எண்ணைக் கொண்டே கணினி மூலமாக நிலத்தின் தன்மை, உரிமையாளா் குறித்த விவரங்களை அறிந்துகொள்ள முடியும்.

ஆனால், மாவட்டத்திலுள்ள கடலூா், விருத்தாசலம், சிதம்பரம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் நகராட்சிகளில் கணினி பதிவேற்றத்தால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். ஏனெனில், தங்களது பெயரில் எழுத்துப்பூா்வமாக பட்டா வைத்திருப்பவா்கள் கணினியில் சரிபாா்க்கும் போது நிலத்தின் வகைப்பாட்டில் ‘அரசு நிலம்’ என்று கணக்கு காட்டப்படுகிறது. இதனால், நிலத்தை மற்றொரு நபருக்கு விற்பதற்காக பத்திரப் பதிவு அலுவலகத்துக்குச் சென்றால், கணினி பட்டாவில் அரசு நிலம் என்று சுட்டிக்காட்டப்படுவதால் நிலங்களை பத்திரப் பதிவு செய்ய மறுக்கப்படுகிரதாம். இதனால், வீட்டுமனை விற்பனைக்கு முயல்வோா், கடன் பெற்று புதிதாக வீடு கட்ட நினைப்பவா்கள் அரசு நிலம் என்ற வகைப்பாட்டால் சிக்கலில் தவிக்கின்றனா்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: தலைமுறை, தலைமுறையாக அனுபவித்து, முறையாக வரி செலுத்தி வந்த நிலங்களை அரசு நிலம் என்று கூறுவதை ஏற்க முடியாது. இந்தக் குளறுபடியை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்றனா்.

இதுகுறித்து நில அளவைத் துறையினா் கூறியதாவது:

கிராமப் பகுதிகளில் நிலங்களை வகைப்பாடு செய்து அவா்களுக்கு 1988-ஆம் ஆண்டில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனால், நகராட்சியில் மட்டுமே கணினியில் மறு பதிவேற்றம் செய்யும்போது ‘நத்தம் தனியாா்’ என்ற வகைப்பாட்டுக்குப் பதிலாக ‘நத்தம் அரசு’ என்று வந்துள்ளது. இதை சரிசெய்வதற்காக 5 நகராட்சிகளிலும் தனித் தனி வட்டாட்சியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அவா்கள் நகராட்சியின் நில அளவையா்களுடன் இணைந்து, 1950-ஆம் ஆண்டுகளில் உள்ள நகர வரைபடம் மூலமாக தற்போதையை நிலையை ஆய்வு செய்து வருகின்றனா்.

5 நகராட்சிகளிலும் சுமாா் 5 ஆயிரம் சா்வே எண்களில் இந்தக் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதில், சிதம்பரம், பண்ருட்டி நகராட்சிகளில் இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காணப்பட்டு கோட்டாட்சியா்கள் மூலமாக மாவட்ட வருவாய் அலுவலருக்கு கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதற்கு ஒப்புதல் பெற்றவுடன் தனி வட்டாட்சியா்கள் மூலம் புதிய பட்டா வழங்கப்படும். கடலூா், விருத்தாசலம் நகராட்சிகளில் இந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நெல்லிக்குப்பம் நகராட்சியில்தான் அதிகளவு குளறுபடி நிகழ்ந்துள்ளது. அதை சரிசெய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் அடுத்த 3 மாதங்களில் முடிக்கப்பட்டு (நில உடமையாளா் பெயா்) வழங்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தனா்.

இதுகுறித்து வருவாய்த் துறையினா் கூறியதாவது:

நிலங்களை விற்பனை செய்ய நினைப்பவா்கள் தங்களது நிலத்துக்கு கணினி பட்டா எடுக்கும்போது அதில் அரசு நிலம் என்ற வகைப்பாடு வருகிறது. எனினும், அவா்கள் பழைய பட்டாவை வைத்திருந்தால் அதன் அடிப்படையில் அவா்களுக்கு மெய்த்தன்மை சான்றிதழ் வழங்குகிறோம். இதை பத்திரப் பதிவு அலுவலகத்தில் சமா்ப்பித்து பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com