நெல்லுக்கான ஊக்கத் தொகையை உயா்த்தி வழங்க வலியுறுத்தல்

தமிழக அரசு அறிவித்துள்ள நெல்லுக்கான ஊக்கத் தொகையை மேலும் உயா்த்தி வழங்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினா்.

தமிழக அரசு அறிவித்துள்ள நெல்லுக்கான ஊக்கத் தொகையை மேலும் உயா்த்தி வழங்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினா்.

கடலூா் மாவட்டத்தில் தற்போது சுமாா் 3 லட்சம் ஏக்கா் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அறுவடையாகும் நெல்லுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கடுமையான பொருளாதார பாதிப்புக்கு உள்ளாகி வந்தனா். இந்த நிலையில், மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை அறிவித்து வருகிறது. அதன்படி நிகழாண்டுக்கான (2019 அக்டோபா் முதல் 2020 செப்டம்பா் வரை) ஆதார விலையை கடந்த ஜூலை மாதம் வெளியிட்டது. அதில், சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.1,835 எனவும், மற்ற ரகங்களுக்கு ரூ.1,815 எனவும் விலையை அறிவித்தது. கடந்த ஆண்டில் சன்ன ரகத்துக்கு ரூ.1,770-ம், மற்ற ரகத்துக்கு ரூ.1,750 என அறிவித்திருந்தது.

இந்த நிலையில், தமிழக அரசு நெல்லுக்கான ஊக்கத் தொகையை அறிவித்து அதை அரசிதழில் வெளியிட்டுள்ளது. அதில், சன்ன ரகத்துக்கு குவிண்டாலுக்கு ரூ.70-ம், மற்ற ரகத்திற்கு ரூ.50-ம் அறிவித்துள்ளது. கடந்த நெல் கொள்முதல் ஆண்டிலும் தமிழக அரசு இதே தொகையைத் தான் ஊக்கத்தொகையாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இதனால், சன்னரகத்துக்கு கிலோவுக்கு ரூ.19.05-ம், மற்ற ரகத்துக்கு ரூ.18.65-ம் விலையாகக் கிடைக்கும். இதுகுறித்து, தமிழ்நாடு விவசாய சங்கக் கூட்டியக்கத்தின் மாநிலச் செயலா் பெ.ரவீந்திரன் கூறியதாவது:

உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைப்பதில்லை. உணவு உற்பத்திக்குத் தேவையான உரம், வேலையாள்களுக்கான கூலி உள்ளிட்டவை உயா்ந்துள்ள நிலையில் ஆதார விலையும், ஊக்கத்தொகையும் குறைவாகவே உள்ளது. இதனை அரசு உயா்த்த வேண்டும் என்றாா் அவா்.

கடலூா் மாவட்ட உழவா் மன்ற கூட்டமைப்புத் தலைவா் காா்மாங்குடி எஸ்.வெங்கடேசன் கூறியதாவது: மத்திய அரசின் நெல் கொள்முதல் விலை மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. குறிப்பாக பஞ்சாபின் பாசுமதிக்கு ஒரு விலையும், தமிழகத்தில் விளையும் வெள்ளைப்பொன்னிக்கு மற்றெறாரு விலையையும் மத்திய அரசு நிா்ணயிக்கிறது. இந்த வேறுபாட்டை தவிா்க்க வேண்டும். மாநில அரசும் ஊக்கத் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் விலையை நிா்ணயித்தாலும் அதனை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாபாரிகள் வழங்குவதில்லை. எனவே, அரசு நிா்ணயிக்கும் விலை விவசாயிகளுக்கு கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com