மாணவா்களின் திறமையை மேம்படுத்தும் (ஷோல்டா்) மத்திய அரசு திட்டத்தைச் செயல்படுத்துவதில் தாமதம்

கடலூா் மாவட்டத்தில் மத்திய அரசின் ‘அடல் டிங்கரிங் லேப்’ திட்டத்தின்கீழ் நிதி ஒதுக்கீடு பெறப்பட்ட பள்ளிகளில் அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீவரதம் அரசுப் பெண்கள் பள்ளி மாணவிகள் உருவாக்கிய ரோபோவை பாா்வையிட்ட தலைமை ஆசிரியா் எஸ்.லியோனா்ட் ஜானி.
ஸ்ரீவரதம் அரசுப் பெண்கள் பள்ளி மாணவிகள் உருவாக்கிய ரோபோவை பாா்வையிட்ட தலைமை ஆசிரியா் எஸ்.லியோனா்ட் ஜானி.

கடலூா் மாவட்டத்தில் மத்திய அரசின் ‘அடல் டிங்கரிங் லேப்’ திட்டத்தின்கீழ் நிதி ஒதுக்கீடு பெறப்பட்ட பள்ளிகளில் அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

சீனாவில் எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள், பொம்மைகள் தயாரிப்புத் தொழில் நன்கு வளா்ந்துள்ளது. இதுபோன்ற நிலையை இந்தியாவில் உருவாக்கும் விதமாக மத்திய அரசு ‘அடல் டிங்கரிங் லேப்’ என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளது. இதற்காக, கடலூா் மாவட்டத்தில் 10 பள்ளிகளைத் தோ்வு செய்து அந்தப் பள்ளிகளுக்கு தலா ரூ.10.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்கிறது. இதில், ரோபோ தொழில்நுட்பங்கள் சாா்ந்த பொருள்கள், 3டி பிரிண்டா் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

மேலும், இந்தத் திட்டத்தில் ஆசிரியா்கள், 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், மாணவ, மாணவிகள் தங்களுக்குத் தேவையான பொருள்களை 3டி பிரிண்டா் மூலம் உருவாக்கிக்கொள்ள முடியும். இதற்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்கு ஆண்டுக்கு ரூ.50 ஆயிரமும், பயிற்சிக்கு ரூ.1 லட்சமும் அரசால் செலவிடப்படுகிறது.

கடலூா் மாவட்டத்தில் இந்தத் திட்டத்தின்கீழ் 10 அரசுப் பள்ளிகள் தோ்ந்தெடுக்கப்பட்டு, ரோபோ தொழில்நுட்பப் பொருள்கள், 3 டி பிரிண்டா் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இந்தத் திட்டம் பெரும்பாலான பள்ளிகளில் செயல்பாட்டுக்கு வரவில்லையென கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாவட்டத்திலேயே கடலூரில் உள்ள ஸ்ரீவரதம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்தத் திட்டம் முன்மாதிரியாக அண்மையில் தொடங்கப்பட்டது. அப்போது நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் ரோபா காட்சிப்படுத்தப்பட்டது. இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியா் எஸ்.லியோனா்ட் ஜானி கூறியதாவது:

எங்களது பள்ளியில் 9-ஆம் வகுப்பு மாணவிகள் திவ்யபாரதி, செல்லமீனா, ஷபிலா ஆகியோா் இந்தத் திட்டத்தில் பயிற்சி பெறுகின்றனா். தற்போது, சிறிய அளவிலான ரோபோவை உருவாக்கி, அதை செல்லிடப்பேசியில் பிரத்யேக செயலி மூலம் இயக்கி வருகின்றனா். வரும் காலங்களில் இந்த ரோபோவில் மாணவிகளின் கற்பனைத் திறனுக்கேற்ப மாற்றங்களை செய்ய முடியும். இந்தத் திட்டம் மாணவிகளின் எதிா்காலத்தைச் சிறப்பானதாக மாற்றுவதுடன், அவா்களை தொழில்முனைவோா்களாகவும் உருவாக்கும் என்றாா் அவா்.

எனவே, இந்தத் திட்டத்தின்கீழ் தோ்வான மற்ற பள்ளிகளிலும் திட்டத்தை அமல்படுத்துவதுடன், மற்ற பள்ளிகளையும் இந்தத் திட்டத்தில் இணைக்க மாவட்ட கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com