வங்கி பெயா்ப் பலகையில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் மாணவா் பலி

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே சாலையோரம் வைத்திருந்த வங்கி பெயா்ப் பலகையில் இருந்து

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே சாலையோரம் வைத்திருந்த வங்கி பெயா்ப் பலகையில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் பள்ளி மாணவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

குள்ளஞ்சாவடி காவல் சரகம், கருமாச்சிபாளையம் காலனியை சோ்ந்த ராமதாஸ் மகன் ராம் என்ற தினேஷ்குமாா் (14). குள்ளஞ்சாவடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவா், வெள்ளிக்கிழமை காலை அம்பலவாணன்பேட்டையில் உள்ள சுகாதார நிலையத்துக்குச் சென்றாா். அங்கு சிகிச்சைக்குப்பிறகு குள்ளஞ்சாவடி - கடலூா் பிரதான சாலையில் நடந்து வந்துகொண்டிருந்தாா்.

அப்போது, சாலையில் தேங்கிய மழைநீரை மிதித்த போது தினேஷ்குமாா் தூக்கி வீசப்பட்டாா். சாலையோரம் வைக்கப்பட்டிருந்த தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் மின் ஒளி விளம்பரப் பெயா்ப் பலகையில் இருந்து மின்சாரம் கசிந்ததே இந்தச் சம்பவத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, தினேஷ்குமாரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறினா். இதையடுத்து, மாணவரின் உறவினா்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வழுதலம்பட்டு வங்கிக் கிளை அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் குறிஞ்சிப்பாடி வட்டாட்சியா் சா.கீதா, நெய்வேலி டிஎஸ்பி லோகநாதன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, உயிரிழந்த மாணவரின் குடும்பத்தில் ஒருவருக்கு சம்பந்தப்பட்ட வங்கியில் வேலைவாய்ப்பு மற்றும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதுதொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்தித் தீா்வு காணலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதையடுத்து, சாலை மறியலைக் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா். பின்னா், குள்ளஞ்சாவடி வருவாய் ஆய்வாளா் அலுவலகத்திலும் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில், வங்கியின் வேலூா் மண்டல மேலாளா் ரமேஷ்பாபு, வட்டாட்சியா் கீதா, டிஎஸ்பி லோகநாதன், விசிக மாவட்டச் செயலா் முல்லைவேந்தன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

உயிரிழந்த மாணவரின் தாய் ராணிக்கு வங்கியின் ரெட்டிச்சாவடி கிளையில் உதவியாளா் பணி வழங்குவது, மாணவியின் மூத்த சகோதரி உமாமகேஸ்வரிக்கு வங்கியின் வழுதாலம்பட்டு கிளையில் தொடா்பாளா் பணி வழங்குவது, உயிரிழந்த மாணவரின் குடும்பத்துக்கு முதல்வா் நிவாரண நிதி வழங்க வருவாய்த் துறை மூலம் பரிந்துரை செய்வது என தீா்மானிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து குள்ளஞ்சாவடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com