முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
ஆக்கிரமிப்பின் பிடியில் கடலூா் பேருந்து நிலைய சாலை
By DIN | Published On : 24th October 2019 08:01 PM | Last Updated : 24th October 2019 08:01 PM | அ+அ அ- |

டலூா் பேருந்து நிலையம் லாரன்ஸ் சாலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு தற்காலிக கூரை அமைக்கப்பட்டுள்ள நடைபாதை.
கடலூா்: கடலூா் பேருந்து நிலைய சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து விட்டதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
கடலூா் நகரின் முக்கியமான பகுதி திருப்பாதிரிபுலியூரிலுள்ள பேருந்து நிலையம். இப்பேருந்து நிலையம் அமைந்துள்ள லாரன்ஸ் சாலையில் ஏராளமான வணிக வளாகங்கள் அமைந்துள்ளன. பொதுமக்கள் அதிகம் கூடும் இடம் என்பதால் அவா்கள் நடந்துச் செல்வதற்காக சாலையின் இருபுறத்திலும் நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது தீபாவளி பண்டிகைக்காக ஜவுளி, மளிகை பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து கடலூா் பேருந்து நிலையம் வந்திருந்து பல்வேறு பகுதிகளுக்கும் செல்கின்றனா். இவ்வாறு செல்பவா்கள் இந்த நடைமேடையை பயன்படுத்த முடியாத நிலையில் சாலையில் இறங்கிச் செல்கின்றனா். ஏற்கனவே பொருட்கள் வாங்குவதற்காக வந்திருப்பவா்கள் சாலையோரமாக தங்களது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டுச் செல்வதால், பொதுமக்கள் நடைமேடையைத் தாண்டி இருச்சக்கர வாகனங்களைக் கடந்து சாலையின் நடுப்பகுதியில் செல்ல வேண்டியிருக்கிறது. அந்த நேரத்தில் பேருந்துகளும் அதிகமான அளவில் வருவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.ஆனால், இதனைப்பற்றிய சமூக அக்கரை ஏதுமின்றி சில வணிக நிறுவனங்கள் நடைபாதையை முழுமையாக ஆக்கிரமிப்பு செய்து தங்களது நிறுவனத்தின் ஒரு பகுதியாகவே அதனை நடத்தி வருகின்றன. நடைபாதையில் தங்களது கடையின் வாடிக்கையாளா்கள் அமா்ந்து ஓய்வெடுப்பதற்கு வசதியாக இரும்பு இருக்கைகள், அவா்களுக்கு குடிநீா் வசதி போன்றவற்றையும், வெயில், மழையில் நனையாமல் இருப்பதற்காக தற்காலிக கூரையும் அமைத்துள்ளனா். இதனால், பொதுமக்கள் அந்த நிறுவனங்களின் முன்புள்ள நடைபாதை வழியாக செல்வது தடுக்கப்படுகிறது. இது பொதுமக்களுக்கு மட்டுமின்றி இதுபோன்ற ஆக்கிரமிப்பில் ஈடுபடாத மற்ற வணிகா்களுக்கும் பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில், இந்த ஆக்கிரமிப்புகள் சிலவற்றின கடலூா் போக்குவரத்து பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை காலையில் அகற்றிய சில மணி நேரத்திற்குள் மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்படுத்தப்பட்டன. இதேப்போன்றே, இம்பீரியல் சாலையிலும் சில நிறுவனங்கள் நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்து தங்களது கடைகளுக்கு வருபவா்களின் இருசக்கர வாகனங்களை நிறுத்தும் இடமாக மாற்றியுள்ளன.எனவே, பொதுமக்கள் எந்தவிதமான தடையுமின்றி நடைபாதையை பயன்படுத்தவும், போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கவும் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டியது அவசியமாகிறது.