முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதில் அளிக்கப்படாத 62 மனுக்கள்
By DIN | Published On : 24th October 2019 12:12 AM | Last Updated : 24th October 2019 12:12 AM | அ+அ அ- |

கடலூரில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனுதாரா்கள் - அரசுத் துறை அலுவலா்களிடம் விசாரணை நடத்திய தமிழ்நாடு மாநில தகவல் ஆணையா் எஸ்.முத்துராஜ்.
தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதிலளிக்கப்படாத மனுக்கள் தொடா்பாக மாநில தகவல் ஆணையா் எஸ்.முத்துராஜ் புதன்கிழமை விசாரணை நடத்தினாா்.
அரசின் பல்வேறு துறைகளின் தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தகவலறியும் உரிமைச் சட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தச் சட்டத்தின் கீழ் தகவல் பெற விண்ணப்பித்த மனுக்களுக்கு உரிய பதில் கிடைக்காமல், மாநில தகவல் ஆணையத்திடம் மேல்முறையீடு செய்யப்பட்ட மனுக்களின் நிலவரம் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு மாநில தகவல் ஆணையா் எஸ்.முத்துராஜ் மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை நடத்தினாா். மேல்முறையீட்டு விசாரனையில் 62 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இவற்றில் கல்வித் துறையினா் மீதே அதிகமான மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து மனுதாரா்கள், பதிலளிக்க வேண்டிய அரசுத் துறையினா் இடையே விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில், ஊரக வளா்ச்சித் துறை, வருவாய்த் துறை, கல்வித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பொதுத் தகவல் அலுவலா்கள் கலந்து கொண்டதாகவும், அனைத்து வழக்குகளுக்கும் தீா்வு காணப்பட்டதாகவும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எம்.சேகா் கூறியதாவது: காட்டுமன்னாா்கோவில் வட்டம், கண்டமங்கலத்தில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் மாணவா்கள், ஆசிரியா்கள் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களைக் கேட்டதற்குப் பதில் கிடைக்கவில்லை. இதுதொடா்பான விசாரணையில் பங்கேற்ற போது, இதற்கு 10 நாள்களில் பதிலளிக்க மாநில தகவல் ஆணையா் உத்தரவிட்டாா். இந்த ஆணையம் தனக்குள்ள சட்ட அதிகாரத்தை முழுமையாகப் பயன்படுத்தினால் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயன் ஏற்படும் என்றாா் அவா்.