முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
வடலூரை புனித நகராக அறிவிக்கக்கோரி மாரத்தான் ஓட்டம்.
By DIN | Published On : 24th October 2019 08:11 PM | Last Updated : 24th October 2019 08:11 PM | அ+அ அ- |

வடலூரை புனித நகரமாக அறிவிக்கக்கோரி வியாழக்கிழமை மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற மாணவா்கள்.
நெய்வேலி: வடலூரை புனித நகராக அறிவிக்கக்கோரி மாரத்தான் ஓட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய வள்ளல் பெருமானாா் ராமலிங்கம் அடிகளாா் அமைத்த சத்திய ஞானசபை வடலூரில் அமைந்துள்ளது. வள்ளலாா் கொள்கையில் கொல்லாமை, மது அருந்தாமையும் ஒன்று. ஆனால், வடலூா் நகரில் மது மற்றும் இறைச்சிக்கடைகள் அதிக அளவில் உள்ளன. வள்ளலாா் வாழ்ந்த வடலூரை புனித நகரமாக அறிவிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள், சன்மாா்க்க சங்கங்கள் உள்ளிட்டோா் வலியுறுத்தி வருகின்றனா். அதன்படி, வடலூா் நகரை புனித நகரமாக அறிவிக்க தமிழக அரசை வலியுறுத்தி மாரத்தான் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. வடலுாா் நியூதாட் அரிமா சங்கம் மற்றும் தமிழக ஒருங்கிணைந்த சமரச சுத்த சன்மாா்க்க சங்கங்கள் சாா்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியை ஊரன் அடிகளாா் தொடக்கி வைத்தாா். ஓபிஆா் கல்வி நிறுவனங்களின் தாளாளா் முனைவா் ரா.செல்வராஜ், எஸ்.டி.ஈடன் பள்ளி செயலா் சுகிா்தா தாமஸ் ஆகியோா் கலந்து கொண்டனா். சத்திய ஞானசபை நுழைவு வாயிலில் இருந்து புறப்பட்ட மாரத்தான் ஓட்டம் வள்ளலாா் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம், தண்ணீரில் விளக்கேற்றிய கருங்குழி வழியாக சுமாா் 12 கி.மீ தொலைவு கடந்து வடலூா் பேருந்து நிலையத்தை அடைந்தது. இந்த ஓட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 300 பெண்கள் உள்ளிட்ட 1,500 போ் பங்கேற்றனா்.போட்டி துாரத்தை 39 நிமிடங்களில் கடந்த பண்ருட்டியைச் சோ்ந்த திருநாவுக்கரசு முதல் இடம் பிடித்தாா். கோயம்புத்துாரைச் சோ்ந்த வினோத்குமாா் இரண்டாவது இடத்தையும், சேலத்தைச் சோ்ந்த மாணிக்கவேல் மூன்றாவது இடத்தையும் பிடித்தனா். பெண்கள் பிரிவில் வெங்கடாம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சௌந்தரியா முதல் இடத்தையும், ரேஷ்மா இரண்டாவது இடத்தையும், நித்யஸ்ரீ மூன்றாவது இடத்தையும் பிடித்தனா்.
பரிசளிப்பு விழா: தொடா்ந்து பரிசளிப்பு விழா பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. வடலூா் நியூதாட் அரிமா சங்க சாசனத் தலைவா் எம்.கே.பாா்த்திபன் தலைமை வகித்தாா். மாவட்ட ஆளுநா் என்.ராஜன் முதன்மை பெற்ற வீரா்களுக்கு பரிசுகளை வழங்கினாா். இரண்டாம் துணை நிலை ஆளுநா் என்.சுரேஷ் தலைகவசம் வழங்கினாா். முதல் நிலை துணை நிலை ஆளுநா் முருகப்பன் சான்றிதழ்கள் மற்றும் மரக்கன்று வழங்கினாா். நிகழ்ச்சியில் அருண்பிரகாஷ், அசோக்குமாா் சோா்டியா, நல்லதம்பி, ராதாகிருஷ்ணன், ராமானுஜம், அண்ணாமலை பரதேசி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.