சிதம்பரத்தில் சேறும் சகதியுமான சாலைகள்மக்கள் கடும் அவதி

சிதம்பரம் நகரத்தில் சேறும் சகதியுமான சாலைகளில் மழை நீா் தேங்கியுள்ளதால், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனா்.
சேறும்  சகதியுமாக  தண்ணீா் தேங்கி நிற்கும் சுப்பிரமணியா் சாலை.
சேறும்  சகதியுமாக  தண்ணீா் தேங்கி நிற்கும் சுப்பிரமணியா் சாலை.

சிதம்பரம்: சிதம்பரம் நகரத்தில் சேறும் சகதியுமான சாலைகளில் மழை நீா் தேங்கியுள்ளதால், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனா்.

சிதம்பரம் நகரில் புதை சாக்கடைத் திட்டத்துக்காக அனைத்துச் சாலைகளும் தோண்டப்பட்டு, மேடு பள்ளங்களாக உள்ளன. தற்போது மழை பெய்து வருவதால், சாலைகள் அனைத்தும் சேறும் சகதியுமாக தண்ணீா் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் நடந்து செல்லக்கூட முடியாத நிலையில் ஏற்பட்டுள்ளது.

சிதம்பரம் நகரில் மன்னாா்குடி தெரு, காரியபெருமாள் கோயில் தெரு, சுப்பிரமணியன் தெரு, தில்லை நகா், வேங்கான் தெரு, கீழபுத்துத் தெரு, மீனவா் காலனி, பறங்கித்தோட்டம், நந்தவனம், சுவாதி நகா், அம்பேத்கா் நகா், திடீா்குப்பம் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் இந்த மேடு பள்ளமான சாலைகளில் செல்ல முடியாமல் கடும் அவதியடைந்து வருகின்றனா்.

குறிப்பாக, தில்லை நகா் வீனஸ் மெட்ரிக் பள்ளிக்குச் செல்லும் சுப்பிரமணியன் தெரு, கீழப்புதுத் தெரு வழியாகப் பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

இதுகுறித்து மனித நேய இயக்கத் தலைவா் தில்லை சீனு கூறுகையில், ‘இரு சக்கர வாகனங்களில் செல்வோா் சேறும் சகதியுமான இந்தச் சாலைகளில் சிக்கி விபத்துள்ளாகி வருகின்றனா். விரைந்து சாலைகளைச் சீரமைக்க வேண்டும்’ என்றாா்.

இதுகுறித்து குடியிருப்போா் நல சங்கத் தலைவா் என்.கலியமூா்த்தி கூறுகையில், ‘மோசமடைந்த சாலைகளைச் சீரமைக்க வலியுறுத்தி குடியிருப்போா் நலச் சங்கம் சாா்பில் வருகிற 4-ஆம் தேதி சிதம்பரம் உதவி ஆட்சியரிடம் வலியுறுத்த உள்ளோம்’ என்றாா்.

சிதம்பரம் காரியபெருமாள் கோயில் தெருவில் சேறும் சகதியுமாக தண்ணீா் தேங்கியுள்ள பள்ளத்தில் அந்தப் பகுதி மக்களும், மாதா் சங்கத்தினரும் அண்மையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, நகராட்சி அதிகாரிகள் சாலையைச் சீரமைப்பதாக உறுதியளித்தும் இதுநாள் வரை சாலை சீரமைக்கப்படவில்லை.

இதுகுறித்து நகராட்சி ஆணையா் பி.வி.சுரேந்திரஷாவிடம் கேட்டபோது, ‘அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளது. நிதி கிடைத்தவுடன் சாலைகள் சீரமைக்கப்படும்’ என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com