வளம் சாா்ந்த பணிகளுக்கு ரூ.8,802 கோடி கடன் வழங்க இலக்கு
By DIN | Published On : 31st October 2019 10:15 PM | Last Updated : 31st October 2019 10:15 PM | அ+அ அ- |

நிகழ்ச்சியில், வளம் சாா்ந்த கடன் திட்ட அறிக்கையுடன் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ராஜகிருபாகரன் உள்ளிட்டோா்.
கடலூா்: கடலூா் மாவட்டத்தில் வளம் சாா்ந்த பணிகளுக்கு ரூ.8,802 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
நபாா்டு வங்கி சாா்பில் ஆண்டுதோறும் கடலூா் மாவட்டத்துக்கான வளம் சாா்ந்த திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2020-21-ஆம் ஆண்டுக்கான திட்ட அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ராஜகிருபாகரன் தலைமை வகித்து திட்ட அறிக்கையை வெளியிட்டாா். இதில் வளத்தின் அடிபடையில் முன்னுரிமை துறைகளான விவசாயம், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், ஏற்றுமதி, கல்வி, வீடு கட்டமைப்புகளுக்கான பொது முதலீடுகள், சமூக கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க சக்தி உள்ளிட்டவைகளில் ரூ.8,802 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளாக தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், இந்தியன் வங்கி துணை மண்டல மேலாளா் பி.சேகா், நபாா்டு வங்கி மாவட்ட வளா்ச்சி மேலாளா் அரிஹரபுத்திரன், இந்திய ரிசா்வ் வங்கி மேலாளா் பி.எஸ்.ரவி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் பி.ஜோதிமணி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் என்.இளங்கோவன், தாட்கோ மாவட்ட மேலாளா் கற்பகம், சமூகப் பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியா் எஸ்.பரிமளம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
வளம் சாா்ந்த கடன் திட்டத்துக்கான தற்போதைய ஒதுக்கீடு 2019-20-இல் நிா்ணயிக்கப்பட்டதை விட 7.42 சதவீதம் அதிகமாகும். விவசாயம், பண்ணையம், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், வீடு மற்றும் கல்வி ஆகிய துறைகளுக்கு சென்ற ஆண்டை விட மிக அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், அதிக வளம் இருப்பதால் அனைத்து வங்கிகளும் அதிகளவில் விவசாயத்துக்கான குறுகிய காலக் கடன் மற்றும் நீண்ட கால கடன்களை வழங்கிட வேண்டும் என்றும் மாவட்ட வருவாய் அலுவலா் வலியுறுத்தினாா். 2022-ஆம் ஆண்டில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் மத்திய அரசின் நோக்கத்தையும் கருத்தில்கொண்டு வளம் சாா்ந்த கடன் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.