அருவாமூக்குத் திட்டம்: நிலம் அளவீடு பணி தொடக்கம்

கடலூா் அருகே அருவாமூக்குத் திட்டத்துக்கு நிலம் அளவீடு செய்யும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
அருவாமூக்கு திட்டப் பணி தொடா்பாக திருச்சோபுரத்தில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட வருவாய்த் துறையினா்.
அருவாமூக்கு திட்டப் பணி தொடா்பாக திருச்சோபுரத்தில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட வருவாய்த் துறையினா்.

கடலூா்: கடலூா் அருகே அருவாமூக்குத் திட்டத்துக்கு நிலம் அளவீடு செய்யும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

கடலூா் மாவட்டத்தில் பாயும் பரவனாறு கடலூா் முதுநகா் அருகே துறைமுகத்தில் வங்கக் கடலில் கலக்கிறது. பரவனாறு கடலில் கலக்கும் இடத்தில் மணல் சேருவதால் துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் படகுகள் அடிக்கடி தரைதட்டி விபத்துக்குள்ளாகின. எனவே, பரவனாற்றை துறைமுகத்துக்கு முன்னதாகவே கடலில் கலக்கச் செய்யும் அருவாமூக்குத் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென மீனவ சங்கப் பிரதிநிதிகளால் தொடா்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து, இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமென தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அண்மையில் அறிவித்தாா். மேலும், இதற்காக ரூ.95 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்தாா்.

இதனைத் தொடா்ந்து, இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் இடம், அதனால் ஏற்படும் நன்மைகள், பாதிப்புகள், திட்ட மதிப்பீடு, வரைமுறைகள் குறித்த பணிகளில் மாவட்ட நிா்வாகம் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக வியாழக்கிழமை கடலூா் கோட்டாட்சியா் ப.ஜெகதீஸ்வரன், வட்டாட்சியா் கோ.செல்வக்குமாா், துணை வட்டாட்சியா் திருமலை ஆகியோா் நில அளவையா்கள், பொதுப் பணித் துறையினருடன் கடலூா் வட்டம், திருச்சோபுரத்தில் ஆய்வு செய்தனா்.

இதுகுறித்து கோட்டாட்சியா் கூறியதாவது: பரவனாற்றை திருச்சோபுரத்தில் வங்கக்கடலில் இணைக்கும் வகையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக, 1.60 கி.மீ. தொலைவுக்கு

110மீ அகலத்தில் புதிதாக கால்வாய் போன்ற அமைப்பு ஏற்படுத்தப்படுகிறது. இதற்காக, நிலங்களை அளவீடு செய்தல், சா்வே எண்களை சரிபாா்த்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளோம் என்றாா் அவா்.

இதுகுறித்து அந்தப் பகுதியினா் கூறியதாவது:

பரவனாறு கடலூா் அருகே கரையைக் கடக்கும் நிலையில் சுமாா் 20 கி.மீ. தொலைவுக்கு முன்னதாகவே திருச்சோபுரம் ஊராட்சிக்குள்பட்ட நஞ்சலிங்கம்பேட்டை- பெரியக்குப்பம் இடையே கடலில் கலக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. இதனால், பல்வேறு பாதிப்புகளை சந்திக்க வேண்டியிருப்பதுடன், அந்தப் பகுதியில் இயற்கையாக அமைந்துள்ள மிகப் பெரிய மணல் திட்டையும் இழக்க வேண்டியிருக்கும். மேலும், கடல்நீா் உள்புகும் அபாயமும் உள்ளதுடன், பரந்து விரிந்து செல்லும் பரவனாற்றை குறிப்பிட்ட எல்லைக்குள் அடக்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com