விசூா் வெள்ளவாரி ஓடையில் கரை சேதம்

பண்ருட்டி பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையால், வெள்ளவாரி ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் கரை சேதம் அடைந்துள்ளது
பண்ருட்டி வட்டம் வெள்ளவாரி ஓடை கரையில் ஏற்பட்டுள்ள மண் அரிப்பு.
பண்ருட்டி வட்டம் வெள்ளவாரி ஓடை கரையில் ஏற்பட்டுள்ள மண் அரிப்பு.

பண்ருட்டி பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையால், வெள்ளவாரி ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் கரை சேதம் அடைந்துள்ளது.

கடலூா் மாவட்ட மக்கள் இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்படுவது தொடா்கதையாகி வருகிறது. 2015-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் பெய்த கனமழையால் கடும் பாதிப்பைச் சந்தித்தது.பண்ருட்டி ஒன்றியத்துக்கு உள்பட்ட பெரியகாட்டுப்பாளையம், விசூா் கிராமங்களில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 13 போ் உயிரிழந்தனா். ஏராளமானோா் தங்களது வீடுகளையும், வாழ்வாதாரத்தையும் இழந்தனா்.

இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மாவட்டத்தில் பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. புதன்கிழமை மதியம் வரை விட்டு, விட்டு மழை பெய்தது.பண்ருட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த மழை நீரானது வெள்ளவாரி மற்றும் இதர ஓடைகள் வழியாக காட்டாற்று வெள்ளமாகப் பாய்ந்ததில் விசூா் பகுதியில் வெள்ளைவாரி ஓடையில் கரை சேதம் அடைந்தது.இதேபோல, மற்றொரு மழை பெய்தால், ஊருக்குள் காட்டாற்று வெள்ளம் புகுந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2015-ஆம் ஆண்டு வெள்ளவாரி ஓடையில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் எங்களது சொந்தங்களையும், வீடு மற்றும் உடைமைகளையும் இழந்தோம். விளை நிலங்கள் மண் மேடாகின.தற்போது பெய்த மழையால் வெள்ளவாரி ஓடைக் கரைகள் மீண்டும் சேதமடைந்துள்ளன. எனவே, பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட நிா்வாகத்தினா் பாா்வையிட்டு எங்களது உயிருக்கும், உடைமைக்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துதர வேண்டும் என்றனா் கிராம மக்கள்.

இதுகுறித்து, பண்ருட்டி வட்டாட்சியா் வே.உதயகுமாா் கூறுகையில், மழையை தொடா்ந்து கள ஆய்வு செய்தோம். பாதிப்பு ஏதுமில்லை. விசூா் வெள்ளவாரி ஓடையில் சுமாா் 30 மீட்டா் தொலைவுக்கு 3 அடி அகலத்தில் கரையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தில் சுமாா் 10 அடி அகலத்தில் கரையில் பலமாக உள்ளது. பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம். பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கூறி மணல் மூட்டைகள் அடுக்க கூறியுள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com