கடலூர் அரசு மருத்துவமனையில் 9 பேருக்கு டெங்கு அறிகுறி
By DIN | Published On : 10th September 2019 08:38 AM | Last Updated : 10th September 2019 08:38 AM | அ+அ அ- |

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களில் 9 பேருக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி இருப்பது தெரியவந்தது.
இந்த மருத்துவமனையில் காய்ச்சல், இருமல் தொடர்பாக சிகிச்சை பெற்று வருபவர்களின் ரத்த மாதிரிகள் அண்மையில் சோதிக்கப்பட்டன.
இதில், 9 பேருக்கு டெங்கு நோய்க்கான அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது.
அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம், கூழையாற்றைச் சேர்ந்த மோகன்தாஸ் (31), சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரியைச் சேர்ந்த இளையபெருமாள் மனைவி கல்யாணி (53), கடலூர் காரைக்காடு பகுதியைச் சேர்ந்த ஹரிகரன் (18), பண்ருட்டி மேலிருப்பு பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் (17), நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த நவீன் (17), நத்தப்பட்டு பாபு (49), திருவந்திபுரம் பில்லாலி தொட்டியைச் சேர்ந்த ஜான்சி (18), பண்ருட்டி அக்கடவல்லி கோபிநாத் (14) உள்ளிட்ட 9 பேருக்கு டெங்கு அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. அவர்கள் அதற்கான தனி வார்டுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. கடலூர் அரசு மருத்துவமனையில் டெங்கு சிகிச்சைக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு பிரிவை கடலூர் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் எஸ்.கீதா திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது: டெங்கு அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 4 பேர் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்ற 5 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெங்கு பாதிப்பு பகுதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும். எனினும், தற்போது நெல்லிக்குப்பம் சுற்றுவட்டாரப் பகுதி, பில்லாலித்தொட்டி, கடலூர் வில்வநகர் பகுதிகளில் சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறோம்.
டெங்கு பாதிப்பு குறித்து பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை. இந்த நோய் கட்டுக்குள்தான் உள்ளது என்றார் அவர்.