சகஸ்ரலிங்கேஸ்வரர் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா
By DIN | Published On : 11th September 2019 09:14 AM | Last Updated : 11th September 2019 09:14 AM | அ+அ அ- |

சிதம்பரம் அருகே மஞ்சக்குழி ஆணையாங்குப்பத்தில் அமைந்துள்ள சகஸ்ரலிங்கேஸ்வரர் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி ஓங்காரனந்தா ஆசிரமத்தில் ஜீவ முக்தி பெற்ற லட்சுமிபாய், சிதம்பரம் அருகே மஞ்சக்குழி ஆணையாங்குப்பம் கிராமத்தில் மகா கைலாயம் என்ற இடத்தில் 25-7-2018 அன்று சமாதி பிரவேசம் அடைந்தார். துறவி லட்சுமிபாய்க்கு, புதுச்சேரி ஓங்காரனந்தா ஆசிரமம் சார்பில் அதிஷ்டானக்கோயில் மற்றும் சகஸ்ரலிங்க கோயில் எழுப்பப்பட்டு கடந்த ஜூலை 24-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையடுத்து, 48 நாள்களுக்கு மண்டலாபிஷேகம் நடத்தப்பட்டு அதன் நிறைவு விழா செவ்வாய்கிழமை சுவாமி ஓங்காரனந்தா முன்னிலையில் நடைபெற்றது. காலை 6 மணிக்கு கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்களும், ஏக தின லட்சார்ச்சனையும் நடைபெற்றன. பின்னர் "ஸ்ரீராதே ஒரு கடவுள் காவியம்' என்ற நூல் வெளியிடப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. விழாவை முன்னிட்டு சுமார் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் ஓங்கார ஆசிரம அதிபர் கோடீஸ்வரானந்தா, ஓம் ஞானேஸ்வரி, சர்வாத்மானந்தா குருமகராஜ், குமார் ராகவன், விஜய் ராகவன், பத்மேஸ்வரி, ராமமூர்த்தி ஐயர், பிரேமலதா தேவி, சாம்பசிவ செட்டியார், சுகுமாரன் முதலியார், கிருஷ்ணன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். மாலையில் கருத்தரங்கம், கர்நாடக இசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன.