சுடச்சுட

  

  கீழணையில் இருந்து கடலூர், நாகை, தஞ்சை மாவட்ட வேளாண் பாசனத்துக்கு அமைச்சர் எம்.சி.சம்பத் புதன்கிழமை தண்ணீரைத் திறந்து விட்டார்.
  மேட்டூர் அணையிலிருந்து 13-8-2019-இல் பாசனத்துக்காக முதல்வர் எடப்பாடி 
  கே.பழனிசாமி தண்ணீரைத் திறந்துவிட்டார். அந்த தண்ணீர் கல்லணைக்கு வந்து, பின்னர் தஞ்சாவூர் மாவட்டம், கீழணையை வந்தடைந்தது.
  கீழணையில் 8 அடி வரை (மொத்தக் கொள்ளளவு 9 அடி) தண்ணீர் தேக்கிவைக்கப்பட்டு, கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு பாசனத்துக்காக புதன்கிழமை திறந்து விடப்பட்டது.
  இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர்கள் வெ.அன்புச்செல்வன் (கடலூர்), சி.சுரேஷ்குமார் (நாகை), அண்ணாதுரை (தஞ்சாவூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீரைத் திறந்துவிட்டார்.
  பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
  தமிழக முதல்வர் ஆணைப்படி கடலூர், தஞ்சை, நாகை மாவட்ட வேளாண் பாசனத்துக்காக கீழணையிலிருந்து புதன்கிழமை தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
  விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாவட்டங்களாக திகழ வழிவகுக்க வேண்டும் என்றார் அவர்.
  கீழணையிலிருந்து வடவாறு வாய்க்காலில் விநாடிக்கு 1800 கன அடியும், வடக்கு ராஜன் வாய்க்காலில் 400 கனஅடியும், தெற்கு ராஜன் வாய்க்காலில் 400 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
  மேலும், கீழணையிலிருந்து திறந்துவிடப்படும் உபரி நீர் கொள்ளிடத்தில் விநாடிக்கு 21,077 கன அடி தண்ணீர் கடலுக்கு வெளியேற்றப்படுகிறது.
  பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட்டதன் மூலம், கொள்ளிடம், வடக்கு ராஜன் வாய்க்கால், கான்சாகிப் வாய்க்கால், கவரப்பட்டு வாய்க்கால், கஞ்சன்கொல்லை வாய்க்கால், வடவாறு வாய்க்கால் ஆகியவற்றின் மூலம் கடலூர் மாவட்டத்தில் நேரடி பாசனமான 47, 997 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
  நாகை, தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள கொள்ளிடம் தெற்கு ராஜன் வாய்க்கால், குமிக்கிமன்னியார் வாய்க்கால், மேலராமன் வாய்க்கால், விநாயகன் தெரு வாய்க்கால் வாயிலாக நேரடி பாசனமாக 39,050 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மொத்தம் 87,047 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.
  நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ ராமஜெயலிங்கம், அரசுக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன், சிதம்பரம் கோட்டாட்சியர் விசுமகாஜன், கண்காணிப்புப் பொறியாளர் ரவி மனோகர்,  விருத்தாசலம் செயற்பொறியாளர் ஆர்.மணிமோகன், உதவி செயற்பொறியாளர் அருணகிரி, உதவிப் பொறியாளர்கள் வெற்றிவேல், முத்துக்குமரன், ஆர்.ரமேஷ், மே.எஸ். ரமேஷ் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் பெ.ரவீந்திரன், கே.வி. இளங்கீரன், பி.விநாயகமூர்த்தி, சேத்தியாத்தோப்பு விஜயகுமார்,  கார்மாங்குடி வெங்கடேசன், ரங்கநாயகி, கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai