நான்குனேரி இடைத்தேர்தல்: திமுகவுடன் ஆலோசித்து முடிவு; எச்.வசந்தகுமார் எம்.பி.

நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக திமுகவுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று எச்.வசந்தகுமார் எம்.பி. கூறினார்.

நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக திமுகவுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று எச்.வசந்தகுமார் எம்.பி. கூறினார்.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் எச்.வசந்தகுமார் புதன்கிழமை இரவு கடலூர் வந்தார். கடலூரில் காமராஜர், அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள கடுமையான வீழ்ச்சியின் காரணமாக லட்சக்கணக்கானவர்கள் வேலையை இழந்து வருகின்றனர். சம்பளம் இல்லாத விடுமுறையை நிறுவனங்கள் அறிவிக்கின்றன.
கார் தயாரிப்பு என்பது பல்வேறு உதிரிப்பாகங்கள் தயாரிப்போடு சேர்ந்ததுதான். கார் தயாரிப்பு நின்றதால் பல்வேறு சிறிய நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. ஆனால், மத்திய அரசு மார்ச் 31-ஆம் தேதி வரை மட்டுமே சலுகை அறிவிக்கிறது. இது இதுவரை உற்பத்தியான கார்களை விற்பனை செய்வதற்கு மட்டுமே உதவும்.
 வங்கிகள், மாணவர்களுக்கு வழங்கிய கல்விக் கடனை தனியார் நிறுவனங்கள் மூலம் கடுமையாக வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.நான்குனேரி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ்  திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டே வெற்றி பெற்றது. தனித்து நின்று வெற்றி பெறவில்லை. எனவே, இடைத்தேர்தலில் திமுகவுடன் கலந்தாலோசித்தே முடிவு எடுக்கப்படும்.
முன்னாள் மத்திய அமைச்சர் 
ப.சிதம்பரத்தின் கைது குறித்து அவரது குடும்பத்தினர் எழுப்பியுள்ள 10 கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை என்றார்.
முன்னதாக, எச்.வசந்தகுமாருக்கு காங்கிரஸ் வர்த்தகப் பிரிவு தலைவர் சிவகுமார் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.  மாவட்ட துணைத் தலைவர் வி.முருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் என்.குமார், சாந்திராஜ், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் பார்த்திபன், ஓவியர் ரமேஷ், ராஜேஷ், நகரச் செயலர் பி.ஜி.கோபால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com