கடலூர் மையத்தில் 100 மெட்ரிக் டன் உயிர் உரங்கள் உற்பத்தி: வேளாண்மைத் துறை

கடலூரில் உள்ள உயிர் உர உற்பத்தி மையத்தில் ஆண்டுக்கு 100 மெட்ரிக் டன் உயிர்  உரங்களும், 50 ஆயிரம் லிட்டர் திரவ

கடலூரில் உள்ள உயிர் உர உற்பத்தி மையத்தில் ஆண்டுக்கு 100 மெட்ரிக் டன் உயிர்  உரங்களும், 50 ஆயிரம் லிட்டர் திரவ உயிர் உரமும் உற்பத்தி செய்யப்படுவதாக வேளாண் துறை தெரிவித்துள்ளது.
வேளாண்மையில் ரசாயன உரங்களின் பயன்பாட்டை தவிர்க்கும் வகையிலும், உயிர் உரங்களின் பயன்பாட்டை அதிகப்படுத்தும் வகையிலும், தமிழகத்திலேயே முதல்முறையாக கடலூரில் உயிர் உர உற்பத்தி மையம் 1982-ஆம் ஆண்டு நிறுவப்பட்டு செயல்பட்டு வருகிறது. 
இந்த நிறுவனத்தில் நெல் மற்றும் இதர பயிர்களுக்கு உகந்த அசோஸ்பைரில்லம், பயறு வகைகள், மணிலாவுக்கு ரைசோபியம் மற்றும் அனைத்துப் பயிர்களுக்குமான பாஸ்போபாக்டீரியா உள்ளிட்ட 5 வகையான உயிர் உரங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து, கடலூர் வேளாண்மை உதவி இயக்குநர் சு.பூவராகன் கூறியதாவது: 
இந்த மையத்தில் தயாரிக்கப்படும் உயிர் உரங்கள் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 100 மெட்ரிக் டன் உயிர் உரங்களாகவும், 50 ஆயிரம் லிட்டர் திரவ உயிர் உரங்களாகவும் உற்பத்தி செய்யப்பட்டு வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலமாக மானிய விலையில் விற்கப்படுகிறது. உயிர் உரங்களை பயிர் விதைக்கும் முன் விதைகளை நேர்த்தி செய்யவும், நாற்றின் வேர்களை நனைக்கவும் மற்றும் நடவு வயலிலும் பயன்படுத்தலாம். 
ஒரு ஹெக்டேருக்கு அரை லிட்டர் வரை ஒவ்வொரு வகை உயிர் உரங்களும் பயன்படுத்தத் தேவையான அளவுகளில் விற்பனை செய்யப்படுகிறது.
திட உயிர் உரங்கள் 200 கிராம் பொட்டலமாக வழங்கப்படுகிறது. இந்த திட உயிர் உரங்கள் நெய்வேலி நிலக்கரி தூளை அடிப்படையாகக் கொண்டவை. திட உயிர் உரங்களை 6 மாதங்கள் வரையிலும், திரவ உயிர் உரங்களை 12 மாதங்கள் வரையிலும் திறன் குறையாமலும் விவசாயிகள் பயன்படுத்தலாம். உலகிலேயே முதல்முறையாக திரவ உயிர் உர உற்பத்தியில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் பாக்டீரியா செல்களை உருவாக்கி விவசாயிகளுக்கு விநியோகம் செய்கிறோம். இதனால், திட உயிர் உரங்களைக் காட்டிலும் செலவு குறைவதோடு, நுண்ணுயிர் அளவு, காலாவதி காலம், செலவு, பயன்படுத்தும் முறைகள் ஆகியவற்றிலும் இந்த உரங்கள் மேம்பட்டவையாக திகழ்கின்றன.
எனவே, விவசாயிகள் சாகுபடி செய்யும்போது ரசாயன உரப் பயன்பாட்டை குறைத்து சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் திட மற்றும் திரவ உயிர் உரங்களை பயன்படுத்த வேண்டும். இதனால், நஞ்சற்ற உணவுப் பொருள்களின் உற்பத்தியை பெருக்க முடியும். மகசூலை அதிகரித்து லாபத்தையும் அதிகப்படுத்தலாம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com