பண்ருட்டியில் தொடரும் விபத்துகள்!

பண்ருட்டி, கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி நேரிடும் விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பண்ருட்டி, கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி நேரிடும் விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பண்ருட்டி-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில், நான்கு முனைச் சந்திப்பு முதல் அரசு மருத்துவமனை முன்பு வரை சாலை நடுவே தடுப்புக்கட்டை அமைக்கப்பட்டுள்ளது. 
சாலையின் இருபுறத்திலும் ஆக்கிரமிப்புகள் அதிகளவில் உள்ளன. மேலும், இலகு மற்றும் கனரக வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கமாக உள்ளது.
அரசு மருத்துவமனை அருகே தடுப்புக்கட்டை தொடங்கும் இடத்தில் இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் இல்லை. மேலும், தடுப்புக் கட்டை உள்ளதை தெரிவிப்பதற்கான ஒளி பிரதிபலிப்பான் வைக்கப்படவில்லை. 
இதனால், நெய்வேலியில் இருந்து பண்ருட்டி நோக்கி வரும் பேருந்து, லாரி உள்ளிட்ட வாகனங்கள் தடுப்புக் கட்டையில் மோதி அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நெய்வேலியில் இருந்து பண்ருட்டி நோக்கி வந்த சிறிய சரக்கு வாகனம் தடுப்புக் கட்டையில் மோதி தீப்பிடித்து எரிந்தது. அதன் ஓட்டுநர் லேசான காயமடைந்தார். இந்த விபத்து நடந்த அடுத்த நாள் கும்பகோணத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசு மிதவைப் பேருந்து தடுப்புக் கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இப்பகுதியில் அடிக்கடி நேரிடும் விபத்துகளைத் தடுக்க சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தடுப்புக் கட்டை இருப்பதை தெரிவிக்க ஒளி பிரதிபலிப்பான் பொருத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com