2,023 அங்கன்வாடி மையங்களுக்கு செல்லிடப்பேசி: மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

கடலூர் மாவட்டத்தில் உள்ள 2,023 அங்கன்வாடி மையங்களுக்கு நவீன செல்லிடப்பேசிகளை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் சனிக்கிழமை வழங்கினார்.


கடலூர் மாவட்டத்தில் உள்ள 2,023 அங்கன்வாடி மையங்களுக்கு நவீன செல்லிடப்பேசிகளை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் சனிக்கிழமை வழங்கினார்.
அங்கன்வாடி மையங்கள் மூலமாக கிராமங்களில் வசிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை, அவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்த விவரங்களை தேசிய அளவில் சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, சிஏஎஸ் என்ற பிரத்யேக செல்லிடப்பேசி மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் வழியாக அங்கன்வாடி பணியாளர்கள் தங்களது மையங்களுக்கான குழந்தைகளின் வருகை, அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவுகள் குறித்த விவரங்களை பதிவேற்றம் செய்ய முடியும். இதன்மூலம், அங்கன்வாடி மையங்களின் முழு விவரங்களையும் மாநில அளவிலும், தேசிய அளவிலும் ஒரே நேரத்தில் கண்காணிக்க  இயலும்.
இந்தத் திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்திலுள்ள 2,023 அங்கன்வாடி மையங்களுக்கும் சிஏஎஸ்  மென்பொருள் பதிவேற்றம் செய்யப்பட்ட செல்லிடப்பேசிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தலைமை வகித்து அங்கன்வாடி பணியாளர்களுக்கு நவீன செல்லிடப்பேசிகளை வழங்கினார்.
இந்த செல்லிடப்பேசியில், இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள  செயலியை பயன்படுத்தி வாக்காளர் பட்டியல் விவரங்களை சரிபார்க்க முடியும். இதுதொடர்பாகவும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஆட்சியர் பயிற்சி அளித்தார்.
நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் மாவட்ட திட்ட அலுவலர் த.பழனி, தேர்தல் வட்டாட்சியர் ப.பாலமுருகன், குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் செல்வி, மோனிஷா, மனோசித்ரா, சீதா ஆகியோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com