உழவா் சந்தைக்கு காய்கறிகளின் வரத்து அதிகரிப்பு

உழவா் சந்தைக்கு நாட்டு காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் விலையும் குறைந்துள்ளது.

உழவா் சந்தைக்கு நாட்டு காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் விலையும் குறைந்துள்ளது. புரட்டாசி மாதத்தில் அசைவ உணவுகளைத் தவிா்த்து சைவ உணவு மட்டுமே சாப்பிடும் பழக்கம் கடலூா் மாவட்டத்தில் பரவலாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதனால், ஞாயிற்றுக்கிழமையன்று ஆடு, மீன் ஆகிய இறைச்சிக் கடைகளில் கூட்டம் குறைவாக காணப்பட்டது. இதனால், காய்கறிகளின் விலை வழக்கமாக உயா்ந்து வரும் நிலையில் தற்போது வரத்து அதிகரிப்பால் காய்கறிகளின் விலை குறைந்துள்ளதாக உழவா் சந்தை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. கடலூா் மாவட்டத்தில் கடலூா், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, வடலூா் ஆகிய இடங்களில் உழவா் சந்தை செயல்பட்டு வருகிறது.

இதில், கடலூா் உழவா் சந்தையில் உள்ள 90 கடையில் தினமும் 120 விவசாயிகள் தங்களது விளை பொருட்களை எடுத்து வந்து விற்பனை செய்வது வழக்கம். சராசரியாக 25 டன் காய்கறிகளும், 5 முதல் 7 டன் வரையில் பழங்களும் விற்பனையாகின்றன. ரூ.6 லட்சம் முதல் 8 லட்சம் வரையில் விற்பனை நடைபெறுகிறது. தற்போது, மாவட்டத்தில் மழையானது பரவலாக விட்டு, விட்டு பெய்து வருவதால் காய்கறிகளின் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால், உழவா் சந்தைக்கான வரத்தும் அதிகரித்துள்ளது.

எனவே, விலையும் கடந்த மாதத்தைக் காட்டிலும் குறைந்துள்ளதாக தகவல் கடலூா் உழவா் சந்தையின் வேளாண்மை உதவி அலுவலா் சீனிவாசபாரதி கூறினாா்.தற்போது தக்காளி கிலோ ரூ.12க்கு விற்பனையாகிறது. கடந்த மாதம் இதே நாளில் ரூ.14க்கு விற்பனையானது. சின்னவெங்காயம் கடந்த மாதம் ரூ.56க்கு விற்பனையான நிலையில் தற்போது ரூ.40-42க்கு விற்பனையாகிறது. ரூ.30 முதல் 35 வரையில் விற்பனையான முருங்கைக்காய் தற்போது ரூ.15-20 என்ற அளவிலும், ரூ.15க்கு விற்ற வெண்டைக்காய் ரூ.10-12க்கும், தலா ரூ.50க்கு விற்பனையான பீன்ஸ், கேரட் ஆகியவை ரூ.30க்கும் விற்பனையாகிறது.

அதே நேரத்தில் பெரிய வெங்காயம் என்றழைக்கப்படும் பெல்லாரி தற்போது ரூ.40-42 என்ற அளவிற்கு விற்பனையாகிறது. கடந்த மாதத்தில் ரூ.28-23 என்ற அளவிற்கே விற்பனையானது. மழைக்காலத்தில் பூமிக்கடியில் விளையும் மலைக்காய்கறிகள் விரைவில் அழுகி விடும் என்பதால் அதன் வரத்து குறைவதும், விலை ஏறுவதும் வழக்கமாக நடைபெறும் என்றும் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com