அரசு வேலை பெற்றுத் தருவதாக ரூ.10 லட்சம் மோசடி: ஒருவர் கைது

அரசு வேலை பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்தவரை போலீஸார் சனிக்கிழமை  கைது செய்தனர்.


அரசு வேலை பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்தவரை போலீஸார் சனிக்கிழமை  கைது செய்தனர்.
திட்டக்குடியைச் சேர்ந்தவர் சு.சுப்பிரமணியன் (53). இவர், தனக்கு அரசியல் செல்வாக்கு உள்ளதாகவும், இதைப் பயன்படுத்தி அரசு வேலை பெற்றுத் தருவதாகவும் கூறி வந்துள்ளார். இதை  உண்மையென நம்பிய திட்டக்குடி அருகே உள்ள தாழநல்லூரைச் சேர்ந்த வெ.செல்வராஜ் (52), தனது மகளுக்கு நாமக்கல் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் பணியை பெற்றுத்தருமாறு கோரியுள்ளார். இதற்காக, கடந்த 2017-ஆம் ஆண்டு ரூ.2.50 லட்சத்தை சுப்பிரமணியனிடம் வழங்கினாராம். 
இதேபோல, சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் பிரபு, விஸ்வநாதன் மகன் கலியன், அழகேசன் மனைவி கீதா ஆகியோரும் தலா ரூ.2.50 லட்சத்தை வேலைக்காக வழங்கினராம். மொத்தம் ரூ.10 லட்சம் பெற்றுக் கொண்ட சுப்பிரமணியன், தான் கூறியபடி அரசு வேலை வாங்கித் தரவில்லையாம். 
எனவே, பணம் அளித்தவர்கள் அதைத் திருப்பித் தரக் கோரியபோதும் தரவில்லையாம். இதையடுத்து அவர்கள் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், மாவட்ட குற்றப் பிரிவு துணைக் கண்காணிப்பாளர் ஆர்.சுந்தரம் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இதையடுத்து சுப்பிரமணியன் தலைமறைவானார். அவரை போலீஸார் தேடி வந்தனர். 
இந்த நிலையில், கோயம்புத்தூர் மாவட்டம், நீலிகோளம்பாளையத்தில் தங்கியிருந்த சுப்பிரமணியனை போலீஸார் சனிக்கிழமை  கைதுசெய்து, அவரை கடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com