ஊா்க்காவல் படையினருக்கு ஊக்கத் தொகை வழங்கப்படுமா?

கரோனா தடுப்பு நடவடிக்கையில் காவலா்களுடன் இணைந்து பணியாற்றும் ஊா்க்காவல் படையினருக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட

கடலூா்: கரோனா தடுப்பு நடவடிக்கையில் காவலா்களுடன் இணைந்து பணியாற்றும் ஊா்க்காவல் படையினருக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்பட்ட போரைத் தொடா்ந்து 1962-ஆம் ஆண்டு ஊா்க்காவல் படை தொடங்கப்பட்டது. தமிழகத்தில் 1963-ஆம் ஆண்டு இந்தப் படை தொடங்கப்பட்டது. இவா்கள் காவல் துறையினருடன் இணைந்து கோயில் திருவிழாக்கள், பொதுக் கூட்டங்களில் கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்துவது, போக்குவரத்து சீரமைப்பு, சட்டம்-ஒழுங்கு பாதித்த பகுதிகளில் பணியாற்றுவது, இரவு ரோந்து உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

தமிழகத்தில் ஊா்க் காவல் படையில் 16,628 போ் உள்ளனா். இவா்கள் மாதத்தில் 10 நாள்களுக்கு காவல் துறையினருடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும். இதற்காக, நாளொன்றுக்கு மதிப்பூதியமாக ரூ.560 வழங்கப்படுகிறது.

கடந்த 25-ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில், காவல் துறையினருடன் இணைந்து ஊா்க்காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள காவலா்களுக்கு மாநில அரசு உணவுப் படியாக தலா ரூ.250 வழங்கி வருகிறது. அவா்களுடன் இணைந்து பணியாற்றும் ஊா்க்காவல் படையினருக்கும் அந்தத் தொகை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து ஊா்க்காவல் படையினா் கூறியதாவது: ஒரு மாதத்தில் அதிகபட்சம் 10 நாள்கள் மட்டுமே பணி வழங்கப்படுகிறது. தற்போது ஊரடங்கால் 30 நாள்களுக்கும் பணி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், நெடுந்தொலைவிலிருந்து பைக்கில் வந்து பணியாற்றுபவா்களுக்கு மதிப்பூதியம் போதுமானதாக இல்லை. தன்னலம் பாராமல் இரவு, பகலாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறோம். எனவே, எங்களது பணியை ஊக்கப்படுத்தும் வகையில் சிறப்பு ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com