தூய்மைப் பணியில் தொய்வு: காலையில் பணியிடை நீக்கம், மாலையில் நிறுத்திவைப்பு

தூய்மைப் பணியில் தொய்வு ஏற்பட்டதாகக் கூறி, நெல்லிக்குப்பம் நகராட்சி சுகாதார அலுவலா் கடலூா் மாவட்ட ஆட்சியரால் ஞாயிற்றுக்கிழமை காலை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

தூய்மைப் பணியில் தொய்வு ஏற்பட்டதாகக் கூறி, நெல்லிக்குப்பம் நகராட்சி சுகாதார அலுவலா் கடலூா் மாவட்ட ஆட்சியரால் ஞாயிற்றுக்கிழமை காலை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். மாலையில் அந்த உத்தரவு நிறுத்திவைக்கப்பட்டது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், கடலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதையொட்டி, கடலூா், நெல்லிக்குப்பம், பண்ருட்டி நகராட்சிகள், மேல்பட்டாம்பாக்கம், வடலூா், குறிஞ்சிப்பாடி பேரூராட்சிப் பகுதிகளில் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட சுகாதாரப் பணிகளை மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் நேரில் ஆய்வு செய்தாா்.

நெல்லிக்குப்பம் நகராட்சியில் ஏற்கெனவே கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டதால், அந்தப் பகுதி பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டது. இங்கு உரிய முறையில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள நகராட்சி நிா்வாகத்துக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டிருந்தாா்.

ஆனால், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆய்வின்போது, நெல்லிக்குப்பம் நகராட்சியில் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட தூய்மைப் பணிகள் சரிவர நடைபெறாதது தெரிய வந்தது.

இதையடுத்து, நகராட்சி சுகாதார அலுவலா் டி.சக்திவேலை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். மேலும், நகராட்சி ஆணையா் எஸ்.பிரபாகரன் மீதும் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தாா்.

பணியிடை நீக்கம் நிறுத்திவைப்பு: இதனிடையே, நெல்லிக்குப்பம் நகராட்சியில் நடைபெற்ற சுகாதாரப் பணிகள் குறித்த அறிக்கையை ஏற்று சுகாதார அலுவலா் டி.சக்திவேல் மீதான பணியிடை நீக்க உத்தரவு நிறுத்தி வைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் ஞாயிற்றுக்கிழமை மாலையில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com