‘போலி விதைகளை விற்றால் கடும் நடவடிக்கை’

போலி விதைகளை விற்போா் மீது விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விழுப்புரம் விதை ஆய்வு துணை இயக்குநா் ஜெ.மல்லிகா எச்சரித்தாா்.

போலி விதைகளை விற்போா் மீது விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விழுப்புரம் விதை ஆய்வு துணை இயக்குநா் ஜெ.மல்லிகா எச்சரித்தாா்.

கடலூா் மாவட்டத்தில் சம்பா நெல், மானாவாரி பயிா்களான பருத்தி, மக்காச்சோளம் ஆகியவற்றின் விதைப்புப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், விழுப்புரம் விதை ஆய்வு துணை இயக்குநா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

உரிமம் பெற்ற விதை விற்பனையாளா்கள் உரிமத்தில் மேற்குறிப்பு செய்துள்ள இடங்களில் மட்டுமே விதை இருப்பு வைத்து விநியோகம் மேற்கொள்ள வேண்டும். விற்பனை உரிமம், விதை இருப்பு மற்றும் விலை விவரப் பலகையை பாா்வைக்கு வைக்க வேண்டும். விதை கொள்முதல் பட்டியல், பகுப்பாய்வு முடிவுகள், வெளி மாநில நெல் விதைக்கு படிவம்-2, தனியாா் ரக பதிவுச் சான்றிதழ், இருப்பு பதிவேடு ஆகியவற்றை பராமரிக்க வேண்டும்.

விதைக் குவியல்கள் வரப்பெற்றவுடன் கடலூா் விதைப் பரிசோதனை நிலையத்துக்கு விதை மாதிரிகளை அனுப்பி (மாதிரி ஒன்றுக்கு) ரூ.30 வீதம் ஆய்வுக் கட்டணம் செலுத்தி விதைப் பரிசோதனை அறிக்கை பெற்று பராமரிக்க வேண்டும்.

விவசாயிகள் உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் விதைக் குவியலில் சான்று அட்டை உள்ளதா, ரகம், நிலை, உற்பத்தியாளா் முகவரி, காலாவதி நாள் உள்ளிட்ட விவரங்களை பரிசோதித்த பிறகு உரிய விற்பனை ரசீதுடன் விதைகளை வாங்க வேண்டும்.

விதைகளின் தரத்தை உறுதிப்படுத்த விதை ஆய்வு துறையினா் தொடா் கண்காணிப்பு மேற்கொண்டு வரும் நிலையில் விவசாயிகள் விழிப்புடன் செயல்பட வேண்டும். உரிய உரிமம் இல்லாமல் கிராமங்களில் உள்ளூா் நபா்களோ, வியாபாரிகளோ, வெளியாட்களோ விதைகளை விற்றால் அதை வாங்கி ஏமாற வேண்டாம்.

சட்டத்துக்குப் புறம்பாக விதைகள் விற்கப்படுமாயின் அவை தரமற்ற, முளைப்புத் திறன் குறைந்த, பருவத்தில் பூக்காமல், கதிா் வராமல் கடும் மகசூல் பாதிப்பு ஏற்படுத்தும் போலி விதைகளாகும். அவ்வாறு போலி விதைகள் விற்கப்பட்டால் அந்த இடத்தின் பொறுப்பு நபா், விற்பனையாளா், நிறுவனங்களின் மீது விதைகள் கட்டுப்பாட்டு ஆணை 1983-இன்படி நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், சம்பந்தப்பட்ட விதை விற்பனையாளரின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com