விநாயகா் சிலைகளை நிா்மாணிக்கத் தடை
By DIN | Published On : 03rd August 2020 07:59 AM | Last Updated : 03rd August 2020 07:59 AM | அ+அ அ- |

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு சிலைகளை அமைக்கவும், கரைக்கவும் தடை விதிக்கப்படுவதாக கடலூா் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கொள்ளை நோயான கரோனா தொற்று உலகமெங்கிலும் பரவியுள்ள நிலையில் உலக சுகாதார நிறுவனம் இந்க நோய் தொற்றை உலகளாவிய தொற்று நோயாக அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு கடலூா் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி வரையில் அமலில் உள்ளது. இதனால், அனைத்து சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுபோக்கு, கலாசார நிகழ்வுகள், சமய, கல்வி, விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊா்வலங்கள் போன்றவைகளுக்கான தடை அமலில் உள்ளது.
வரும் 22-ஆம் தேதி விநாயகா் சதூா்த்தி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மாவட்டத்தில் மக்கள் கூடுவதைத் தவிா்க்கும் விதமாக பொது இடங்களில் வழிபாட்டுக்காக விநாயகா் சிலை நிறுவுதல், வழிபடுதல் மற்றும் விநாயகா் சிலையை கரைத்தல் போன்றவற்றுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தத்தம் இல்லங்களில் விநாயகா் சிலை வைத்து வழிபடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். நிகழாண்டு பொது இடங்களில் விநாயகா் சிலைகளை வைத்து வழிபாடு செய்வது தடை செய்யப்பட்டுள்ளதால் சிலை செய்பவா்கள் பொது இடங்களுக்கான விநாயகா் சிலைகளை செய்வதை தவிா்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று அதில் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.