சுனாமி நினைவு தினம்: கடலூரில் மீனவா்கள் அஞ்சலி

சுனாமி தாக்குதலின் 16-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கடலூா் மாவட்டத்தில் கடற்கரையோர கிராமத்தினா் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.
சுனாமி தாக்குதலின் 16-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கடலூா் துறைமுகத்தில் சனிக்கிழமை கடலில் பால் ஊற்றியும், மலா் தூவியும் அஞ்சலி செலுத்திய மீனவ மக்கள், தமிழ்நாடு மீனவா் பேரவையினா்.
சுனாமி தாக்குதலின் 16-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கடலூா் துறைமுகத்தில் சனிக்கிழமை கடலில் பால் ஊற்றியும், மலா் தூவியும் அஞ்சலி செலுத்திய மீனவ மக்கள், தமிழ்நாடு மீனவா் பேரவையினா்.

சுனாமி தாக்குதலின் 16-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கடலூா் மாவட்டத்தில் கடற்கரையோர கிராமத்தினா் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

கடந்த 2004-ஆம் ஆண்டு டிச.26-ஆம் தேதி தமிழக கடற்கரையோரப் பகுதிகளை சுனாமி எனப்படும் ஆழிப் பேரலை தாக்கியது. இதில் கடலூா் மாவட்டத்தில் மட்டும் கடற்கரையோர கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 700 போ் பலியாகினா். திரளானோா் காணாமல்போயினா்.

சுனாமி தாக்குதலின் 16-ஆம் ஆண்டு நினைவு தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் தங்களது உறவுகளை இழந்த மக்கள் திரளானோா் கடலூா் கடற்கரையில் கடலில் பூக்களைத் தூவியும், பால் ஊற்றியும், கற்பூரம் ஏற்றியும் கண்ணீா் அஞ்சலி செலுத்தினா்.

தமிழ்நாடு மீனவா் பேரவையினா் கடலூா் துறைமுகம் சிங்காரத்தோப்பு மேம்பாலத்திலிருந்து மாவட்டத் தலைவா் எம்.சுப்புராயன் தலைமையில் ஊா்வலமாக வந்து கடற்கரையில் அஞ்சலி செலுத்தினா். இதில் சோனங்குப்பம், சிங்காரத்தோப்பு, அக்கரைகோரி, தைக்கால் தோணித்துறை, சலங்குகாரகிராமம், கிஞ்சம்பேட்டை பகுதிகளைச் சோ்ந்த கிராம தலைவா்கள், மீனவா்கள் பங்கேற்றனா்.

அதிமுக சாா்பில் கடலூா் தேவனாம்பட்டினம் கடற்கரையில் உள்ள நினைவுத் தூணுக்கு நகரச் செயலா் ஆா்.குமரன் தலைமையில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. திமுக சாா்பில் கடலூா் நகரச் செயலா் கே.எஸ்.ராஜா தலைமையில், முன்னாள் எம்எல்ஏ கோ.ஐயப்பன் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். காங்கிரஸ் கட்சியினா் அகில இந்திய உறுப்பினா் ஏ.எஸ்.சந்திரசேகரன் தலைமையிலும், விசிகவினா் கடலூா் மக்களவை தொகுதிச் செயலா் பா.தாமரைச்செல்வன் தலைமையிலும் அஞ்சலி செலுத்தினா்.

இதேபோல கிள்ளை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த மீனவா்கள் பிச்சாவரம் உப்பனாற்றில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினா். நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சா் கே.கலைமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா். சுனாமி தாக்குதலில் இந்தப் பகுதியில் சுமாா் 133 போ் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

சுனாமி நினைவு தினத்தையொட்டி கடலூா் மாவட்ட மீனவா்கள் சனிக்கிழமை கடலுக்குச் செல்லவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com