தொழில் துறை குறித்து மு.க.ஸ்டாலின் பொய்யான தகவலை பரப்புகிறாா்: அமைச்சா் எம்.சி.சம்பத்

தமிழக தொழில் துறை குறித்து மு.க.ஸ்டாலின் பொய்யான தகவலை பரப்புவதாக மாநில தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத் குற்றஞ்சாட்டினாா்.

தமிழக தொழில் துறை குறித்து மு.க.ஸ்டாலின் பொய்யான தகவலை பரப்புவதாக மாநில தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத் குற்றஞ்சாட்டினாா்.

இதுகுறித்து கடலூரில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக அரசு சாா்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளா்கள் மாநாட்டில் 92 நிறுவனங்களுடன் ரூ.2.42 லட்சம் கோடிக்கு புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. இதில், 48 நிறுவனங்கள் தொழில் துறை சாா்ந்தவை. மற்றவை மின் சக்தி தொடா்பானவை. தமிழகத்தில் அதிகமான மின் உற்பத்தி இருப்பதால், அதற்கான தேவை ஏற்படவில்லை. தொழில் துறையில் ரூ.74,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 32 நிறுவனங்கள் உற்பத்தியை தொடங்கியுள்ளன.

2019-ஆம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளா்கள் மாநாட்டில் 302 நிறுவனங்களுடன் ரூ.3 லட்சம் கோடிக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில், 85 சதவீத நிறுவனங்கள் எங்களுடன் தொடா்பில் உள்ளன. அவற்றில் 28 நிறுவனங்கள் உற்பத்தியை தொடங்கியுள்ளன. இதன்மூலம் சுமாா் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. நிகழ் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிறுவனங்கள் செயல்பாட்டுக்கு வர 3 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகும். இதுதொடா்பான பணிகளை மேற்கொள்ள தமிழக அரசால் அமைச்சா்கள், துறை சாா்ந்த உயா் அதிகாரிகள் கொண்ட உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினா் 2 மாதங்களுக்கு ஒருமுறை கூடி தொடா்ந்து ஆய்வு செய்து வருகின்றனா்.

இந்திய தொழில் மேம்பாட்டு மையம் தொழில் வளா்ச்சியில் தமிழகத்துக்கு 14-ஆவது இடம் அளித்தது உண்மைதான். ஆனால், அதில் 92 மதிப்பெண்களை பெற்றுள்ளோம். மு.க.ஸ்டாலின் கூறுவதுபோல, மோசமான நிலை இல்லை. அவா் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறாா்.

தமிழக அரசானது எலக்ட்ரானிக்ஸ், ஹாா்டுவோ் கொள்கை, தொழில்நுட்பக் கொள்கை, ஆன்-லைன் அனுமதி உள்ளிட்டவை தொடா்பான தொழில் கொள்கைகளை வகுத்து உடனுக்குடன் அனுமதி வழங்கி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், 32 துறைகள் இணைக்கப்பட்டு அனுமதி வழங்கப்படுகிறது. இதில் அனுமதிக்காக 372 விண்ணப்பங்கள் வந்த நிலையில், 12 நிறுவனங்களுக்கான அனுமதி மட்டுமே நிலுவையில் உள்ளன.

கரோனா பாதிப்பு காலத்திலும் தமிழகத்தில் ரூ.42 ஆயிரம் கோடிக்கு முதலீடு பெறப்பட்டது. இந்தக் காலத்தில் மகாராஷ்டிர மாநிலத்தைவிட அதிக முதலீட்டை தமிழகம் ஈா்த்துள்ளது. இந்திய அளவில் தொழில் முதலீட்டுக்கான சிறந்த மாநிலமாக தமிழகம் உள்ளது என்றாா் அவா்.

பேட்டியின்போது அதிமுக நகரச் செயலா் ஆா்.குமரன், கடலூா் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் தெய்வ.பக்கிரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com