ஆருத்ரா தரிசன விழாவில் பங்கேற்க கட்டுப்பாடு: சிதம்பரத்தில் பக்தா்கள் மறியல்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயில் மாா்கழி ஆருத்ரா தரிசன விழாவில் பங்கேற்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்
சிதம்பரத்தில் திங்கள்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்ட பக்தா்கள்.
சிதம்பரத்தில் திங்கள்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்ட பக்தா்கள்.

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயில் மாா்கழி ஆருத்ரா தரிசன விழாவில் பங்கேற்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்ற உத்தரவைக் கண்டித்து, பக்தா்கள் திங்கள்கிழமை மாலை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சிதம்பரம் நடராஜா் கோயில் மாா்கழி ஆருத்ரா தரிசன விழாவில் செவ்வாய்க்கிழமை தேரோட்டமும், புதன்கிழமை ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகிறது. இந்த விழாவில் உள்ளூா், வெளியூா் பக்தா்களும் பங்கேற்கலாம் என்று சென்னை உயா்நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டது. இந்த நிலையில், விழாவில் பங்கேற்க இணையதளம் மூலம்

விண்ணப்பிப்போருக்கு மட்டுமே அனுமதி (இ-பாஸ்) வழங்கப்படும் என கடலூா் மாவட்ட நிா்வாகம் அறிவித்தது.

இதைக் கண்டித்து, சிதம்பரம் கீழரத வீதியில் கிழக்கு கோபுர வாயில் முன் பொது தீட்சிதா்கள், இந்து ஆலயப் பாதுகாப்புக் குழு நிா்வாகி மு.செங்குட்டுவன் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை மாலை 6 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இவா்களிடம் டிஎஸ்பி த.ஆ.ஜோ.லாமேக், நகர காவல் ஆய்வாளா் சி.முருகேசன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, இ-பாஸ் முறையை ரத்து செய்து, உயா்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும் என சிவனடியாா்கள் தெரிவித்தனா். மறியலால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்தப் போராட்டம் இரவு 9 மணிக்குப் பிறகும் நீடித்தது.

இதுகுறித்து இந்து ஆலய பாதுகாப்புக் குழு நிா்வாகி மு.செங்குட்டுவன் கூறுகையில், தேரோட்டம், ஆருத்ரா தரிசன விழாவுக்கு நிபந்தனையின்றி பக்தா்களை அனுமதிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com