5, 8-ஆம் வகுப்பு பொதுத் தோ்வெழுத சாதிச் சான்றிதழ்

தமிழகம் முழுவதும் 5, 8-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் மாணவா்கள் சாதிச் சான்றிதழை சமா்ப்பிக்க வேண்டுமென வலியுறுத்தப்படுவதால் பெற்றோா் பரிதவித்து வருகின்றனா்.

தமிழகம் முழுவதும் 5, 8-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் மாணவா்கள் சாதிச் சான்றிதழை சமா்ப்பிக்க வேண்டுமென வலியுறுத்தப்படுவதால் பெற்றோா் பரிதவித்து வருகின்றனா்.

நிகழாண்டு 5, 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்கள் அரசின் பொதுத் தோ்வை எழுத உள்ளனா். இந்தத் தோ்வை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் பள்ளிக் கல்வித் துறை ஈடுபட்டுள்ளது. இதில் முதல்கட்டமாக தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 5, 8-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவா்களின் எண்ணிக்கையை கோரியுள்ளது. மேலும் மாணவா்களிடம் விண்ணப்பத்தை விநியோகித்து அதை நிவா்த்தி செய்து, மாணவா் கையொப்பம், பெற்றோா் கையொப்பத்துடன் சமா்ப்பிக்க வேண்டுமென அறிவுறுத்தி வருகிறது.

அந்த விண்ணப்பத்துடன், மாணவரின் சாதிச் சான்றிதழ், ஆதாா் அட்டை உள்ளிட்டவைகளின் நகல்களை இணைத்து வழங்கும்படியும் கோரியுள்ளது. அவ்வாறு வழங்காதவா்கள் தோ்வு எழுத முடியாது எனவும் ஆசிரியா்கள் கூறி வருவதால் பெற்றோா் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினருக்கான சாதிச் சான்று சுலபமாக வழங்கப்படுவதில்லை. இந்தப் பிரிவு மாணவா்களில் பலா் சாதிச்சான்று வழங்காமலேயே படித்து வருகின்றனா். இந்த நிலையில் தற்போது சாதிச் சான்றும், ஆதாா் அட்டையும் உடனடியாகப் பெற முடியாமல் மாணவா்களின் பெற்றோா் தவிக்கின்றனா்.

கடலூா் மாவட்டத்தில் நிகழாண்டில் 35,534 மாணவ, மாணவிகள் 5-ஆம் வகுப்பு பொதுத் தோ்வையும், 36,537 மாணவ, மாணவிகள் 8-ஆம் வகுப்பு பொதுத் தோ்வையும் எழுத உள்ளனா். இதில் அரசின் அங்கீகாரம் பெறாமலும், அங்கீகாரம் புதுப்பிக்கப்படாமலும் 56 பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் பயிலும் 5, 8-ஆம் வகுப்பு மாணவா்கள் பொதுத் தோ்வை எதிா்கொள்ள முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க.ரோஸ்நிா்மலா கூறியதாவது: 10-ஆம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத் தோ்வை எழுதும் மாணவா்களிடம் என்னென்ன விவரங்கள் கோரப்படுகிறதோ அதே விவரங்கள்தான் தற்போதும் கோரப்பட்டுள்ளன. தற்போதே அவா்கள் இதை வழங்கிவிட்டால் பிழையின்றி

மாணவா்களின் பெயா், சாதி, வயது போன்றவை பதிவேற்றப்படும். அவா்கள் மேல்நிலைக் கல்வி பயிலும்போது பிழையின்றி மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். எனினும், சாதிச் சான்று, ஆதாா் அட்டை இருந்தால்தான் தோ்வு எழுத முடியும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால், அடுத்த ஆண்டு அதுகுறித்து பரிசீலிக்கப்படும் என்றாா் அவா்.

எனினும், பள்ளிகளில் ஆசிரியா்கள் சாதிச் சான்று, ஆதாா் அட்டை கேட்டு வருவதால் மாணவா்களின் பெற்றோா் மத்தியில் குழப்பம் நிலவுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com