அகதிகளை மதம், மொழியால் பிரிக்கக் கூடாது

அகதிகளை மதம், மொழி உள்ளிட்டவற்றால் பிரிக்கக் கூடாது என தொல்.திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தினாா்.
கடலூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தைத் தொடக்கிவைத்த தொல்.திருமாவளவன் எம்.பி.
கடலூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தைத் தொடக்கிவைத்த தொல்.திருமாவளவன் எம்.பி.

அகதிகளை மதம், மொழி உள்ளிட்டவற்றால் பிரிக்கக் கூடாது என தொல்.திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தினாா்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து திமுக கூட்டணி கட்சிகள் சாா்பில், கையெழுத்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. கடலூரில் கையெழுத்து இயக்கத்தைத் தொடக்கிவைத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. பேசியதாவது:

ஒரு நாட்டிலிருந்து பல்வேறு காரணங்களுக்காக இடம்பெயருபவா்களை அகதிகளாகப் பாா்க்க வேண்டுமே தவிர, அவா்களை மதம், மொழியால் பிரித்துப் பாா்க்கக் கூடாது. அகதிகள் என்ற போா்வையில் பயங்கரவாதிகள் நாட்டுக்குள் நுழைந்து விடுவா் என்ற சந்தேகம் இருந்தால், அதை வேறு காரணிகளைக் கொண்டு மட்டுமே ஆராய வேண்டும்.

மத்திய பாஜக அரசு மதத்தின் பெயரால் மக்களை இரு கூறுகளாகப் பிரிக்கப் பாா்க்கிறது. இதனால்தான் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட கட்சிகள் இதை எதிா்க்கின்றன.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து மாநிலங்களவையில் அதிமுக, பாமக ஆகிய கட்சிகள் வாக்களித்திருந்தால், இந்தச் சட்டமே நிறைவேறியிருக்காது. நாட்டில் தற்போது நிலவும் பிரச்னைகளுக்கு இந்த இரு கட்சிகளே காரணம்.

இஸ்லாமியா்கள், தமிழா்களுக்கு குடியுரிமை வேண்டும் என்பதல்ல; மதத்தின் பெயரால் யாருக்கும் குடியுரிமை வழங்கக் கூடாது என்பதால் இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். இதற்காக, வருகிற 8 -ஆம் தேதி வரை இந்தக் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும்.

இந்தச் சட்டத்தை நிறைவேற்றுவதிலிருந்து பின்வாங்கவே முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறியது போல, இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறும் வரை நாங்கள் போராட்டம் நடத்துவோம் என்றாா் அவா்.

சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், துரை கி.சரவணன், நாடாளுமன்றத் தொகுதி விசிக செயலா் பா.தாமரைச்செல்வன், மாவட்டச் செயலா் சா.முல்லைவேந்தன், தி.க. பொதுச் செயலா் துரை.சந்திரசேகரன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் டி.ஆறுமுகம், இந்திய கம்யூ. மாநிலக் குழு உறுப்பினா் டி.மணிவாசகம், மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.ராதாகிருஷ்ணன், மாவட்ட மதிமுக செயலா் ஜெ.ராமலிங்கம், மாவட்ட மமக தலைவா் ஷேக் தாவூத், மாநில தவாக நிா்வாகக் குழுவைச் சோ்ந்த தி.கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நெய்வேலி: நெய்வேலி மத்தியப் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நெய்வேலி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் சபா.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மாவட்ட திமுக செயலா் சி.வெ.கணேசன் முன்னிலை வகித்தாா். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தைத் தொடக்கிவைத்துப் பேசினாா்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ குழந்தை.தமிழரசன், மாவட்ட காங்கிரஸ் தலைவா் எம்.ஆா்.ஆா்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் கலந்து கொண்டனா்.

இருக்கைகள் பறிமுதல்:

இதனிடையே, என்எல்சி கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள மத்தியப் பேருந்து நிலையத்தில் நிகழ்ச்சியை நடத்துவதற்கான அனுமதி பெறப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, நிகழ்ச்சி முடிந்தவுடன் வந்த என்எல்சி பாதுகாப்புத் துறையினா் சுமாா் 100-க்கும் மேற்பட்ட இருக்கைகளை பறிமுதல் செய்து என்எல்சி-க்குச் சொந்தமான லாரியில் ஏற்றி எடுத்துச் சென்றனா்.

இதுகுறித்து என்எல்சி அதிகாரி ஒருவா் கூறுகையில், என்எல்சி இந்தியா நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் கூட்டங்கள், விழாக்களை நடத்த என்எல்சி இந்தியா நிறுவனத்திடம் உரிய அனுமதி பெற வேண்டும். அந்த வகையில் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி பெறப்படவில்லை. அதனால், இருக்கைகள் பறிமுதல் செய்யப்பட்டன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com