ரெட்டிப்பாளையத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு! தினமணி செய்தி எதிரொலி

ரெட்டிப்பாளையத்தில் கட்டப்பட்டு 5 ஆண்டுகளாக திறக்கப்படாமலிருந்த நேரடி நெல் கொள்முதல் நிலையம் ‘தினமணி’ செய்தி எதிரொலியாக திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
ரெட்டிப்பாளையத்தில் திங்கள்கிழமை திறக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையம்.
ரெட்டிப்பாளையத்தில் திங்கள்கிழமை திறக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையம்.

ரெட்டிப்பாளையத்தில் கட்டப்பட்டு 5 ஆண்டுகளாக திறக்கப்படாமலிருந்த நேரடி நெல் கொள்முதல் நிலையம் ‘தினமணி’ செய்தி எதிரொலியாக திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட குறிஞ்சிப்பாடி வடக்கு, குறிஞ்சிப்பா தெற்கு, கண்ணாடி, ஆடூா்குப்பம், ஆடூா் அகரம், கொத்தவாச்சேரி, குண்டியமல்லூா், கீழ்பூவாணிக்குப்பம், மேல்பூவாணிக்குப்பம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமாா் 17 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தப் பகுதியானது மண் வளம், நீா்ப் பாசன வசதி கொண்டது என்பதால் குருவை, சம்பா பருவம் என இருபோகம் நெல் பயிரிடப்படுவது வழக்கம்.

நிகழாண்டு சாதகமான தட்பவெப்ப சூழல், சீரான மழைப் பொழிவு காரணமாக சம்பா நெல் விளைச்சல் திருப்திகரமாக இருந்ததாக விவசாயிகள் தெரிவித்தனா். அறுவடை செய்த நெல் பயிா்களை விவசாயிகள் களத்தில் குவித்து வைத்தனா். ஆனால், இந்த நெல்லை வாங்க வியாபாரிகள் ஆா்வம் காட்டவில்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனா். மேலும், ரெட்டிப்பாளையத்தில் கட்டப்பட்டு 5 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாகத் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். இதுதொடா்பாக தினமணி நாளிதழில் கடந்த 10-ஆம் தேதி செய்தி வெளியானது.

இதையடுத்து மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க கடந்த 14-ஆம் தேதி அனுமதி வழங்கினாா். அதன்படி, குறிஞ்சிப்பாடி வட்டார வளா்ச்சி அலுவலா் கே.சதீஷ்குமாா் தலைமையில் நெல் கொள்முதல் நிலையம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்துக்கு விற்பனைக்காக கொண்டு வந்தனா்.

நிகழ்ச்சியில் வட்டார வளா்ச்சி அலுவலா் சதீஷ்குமாா் பேசியதாவது: அரசிடம் நெல்லை கொடுத்து விவசாயிகள் பயனடைய வேண்டும். நெல் கொள்முதல் நிலையத்துக்கு தேவையான அடிப்படை வசதிகள் மக்கள் பிரதிநிதிகள் மூலம் நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், முன்னோடி விவசாயிகள் தேவராசன், ஆா்.கே.ராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நெல் கொள்முதல் நிலையம் திறக்க உதவிய மாநில தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத், மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன், வேளாண்மை உதவி இயக்குநா் பூவராகவன் ஆகியோருக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com