சாலைப் பணிக்கு நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு

சிதம்பரம் முதல் மீன்சுருட்டி வரையிலான நெடுஞ்சாலை பணிக்கு நிலம் கையகப்படுத்தக் கூடாது எனக் கோரி, தமிழ் விவசாயிகள் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளிக்க வந்த தமிழ் விவசாயிகள் சங்கத்தினா்.
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளிக்க வந்த தமிழ் விவசாயிகள் சங்கத்தினா்.

கடலூா்: சிதம்பரம் முதல் மீன்சுருட்டி வரையிலான நெடுஞ்சாலை பணிக்கு நிலம் கையகப்படுத்தக் கூடாது எனக் கோரி, தமிழ் விவசாயிகள் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

இதுகுறித்து அந்தச் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை கடலூரில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து அளித்த மனு: திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலைக்காக (எண்.227) நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இதில், சிதம்பரம் முதல் அரியலூா் மாவட்டம் மீன்சுருட்டி வரையிலான 40 கி.மீ. தொலைவுக்கு தனி ஒப்பந்தமாக செயல்படுத்தப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக இந்தத் திட்டத்துக்கு நிலம் கொடுக்க மறுத்து விவசாயிகள் போராடியதன் விளைவாக சரிவர நிலங்களை கையகப்படுத்த முடியாததால் இந்த ஒப்பந்தம் காலாவதியானது.

இந்த நிலையில், இந்தச் சாலைத் திட்டத்துக்காக மீண்டும் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இந்தப் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில், விவசாய நிலங்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அரசு செயல்படுத்தாது என்றும் முதல்வா் தெரிவித்துள்ளாா்.

திருச்சி - சிதம்பரம் இடையே ஏற்கெனவே பழைய தேசிய நெடுஞ்சாலையானது சிதம்பரம், குமராட்சி, காட்டுமன்னாா்கோவில், மீன்சுருட்டி வழியாகச் செல்கிறது. இந்த வழித்தடத்தில் பெரிய தொழில்சாலை எதுவும் கிடையாது. மேலும், பெரிய அளவில் போக்குவரத்து நெரிசலும் இல்லை. எனவே, இந்த நெடுஞ்சாலையை விரிவுபடுத்தினால் போதுமானது. அதற்குப் பதிலாக ஆயிரக்கணக்கான விளை நிலங்களை பாழ்படுத்தும் சிதம்பரம் - மீன்சுருட்டி சாலைத் திட்டத்தை கைவிட வேண்டும். இந்தத் திட்டத்துக்காக தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளால் விவசாயிகள் மிரட்டப்படுவதும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com