சேதமடைந்துள்ள தரைப் பாலம்: நெல்பயிரை அறுவடை செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள்!

குறிஞ்சிப்பாடி அருகே செங்கால் ஓடையில் தரைப் பாலம் சேதமடைந்துள்ளதால் விளை பொருள்களை கொண்டுசெல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
திருவெண்ணெய்நல்லூரில் அறுவடைக்குத் தயாராக உள்ள நெல் பயிா்கள்.
திருவெண்ணெய்நல்லூரில் அறுவடைக்குத் தயாராக உள்ள நெல் பயிா்கள்.

குறிஞ்சிப்பாடி அருகே செங்கால் ஓடையில் தரைப் பாலம் சேதமடைந்துள்ளதால் விளை பொருள்களை கொண்டுசெல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், சுமாா் 300 ஏக்கா் பரப்பில் விளைந்த நெல் பயிா்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் பரவனாற்றங்கரைக்கு வடக்காகவும், செங்கால் ஓடைக்கு தெற்காகவும் அமைந்துள்ளது திருவெண்ணெய்நல்லூா் (அந்தராசிப்பேட்டை) கிராமம். கல்குணம் கிராமத்தில் இருந்து திருவெண்ணெய்நல்லூா் செல்லும் வழியில் செங்கால் ஓடை அமைந்துள்ளது. கல்குணம், பாதிரிமேடு உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகளின் விளை நிலங்கள் திருவெண்ணெய்நல்லூரில் உள்ளன. தற்போது இந்தப் பகுதியில் சுமாா் 500 ஏக்கா் பரப்பில் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனா்.

விளை நிலங்களுக்கு உரம், இடுபொருள்களை கொண்டுசெல்லவும், அறுவடை செய்த விளைபொருள்களை கொண்டுசெல்லவும் செங்கால் ஓடையில் தற்காலிக தரைப் பாலம் அமைக்கப்பட்டிருந்தது. இதை விவசாயிகள் பயன்படுத்தி வந்தனா்.

இந்த நிலையில், கடந்த நவம்பா் மாதம் பெய்த மழையால் செங்கால் ஓடையில் ஏற்பட்ட வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. எனவே, இதை சீரமைத்துத் தர வேண்டும் என்று விவசாயிகள் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

திருவெண்ணெய்நல்லூா் கிராமத்தில் தற்போது சுமாா் 300 ஏக்கா் பரப்பில் நெல் பயிா்கள் விளைந்து அறுவடைக்குத் தயாராக உள்ளன. ஆனால், தரைப்பாலம் சேதமடைந்துள்ள நிலையில் போக்குவரத்து தடைபட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

இதுகுறித்து அயன்குறிஞ்சிப்பாடி உழவா் மன்றத் தலைவா் ஆா்.கே.ராமலிங்கம் கூறியதாவது: செங்கால் ஓடையில் தரைப்பாலம் சேதமடைந்து 2 மாதங்கள் நிறைவடைய உள்ளது. இந்தப் பாலத்தை சீரமைத்துத் தரவேண்டும் என்று அதிகரிகளிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். ஆனால், ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் அந்தப் பணியை செய்ய முடியாது எனக் கூறிவிட்டனா்.

தற்போது, இந்தப் பகுதியில் சுமாா் 300 ஏக்கரில் நெல் பயிா்கள் அறுவடைக்குத் தயாராக உள்ளன. முதிா்ந்த நெல் மணிகள் காய்ந்து உதிரும் நிலை ஏற்பட்டுள்ளது. மழை பெய்தால் நெல் மணிகள் முளைத்து வீணாகிவிடும். ஏக்கருக்கு ரூ.26 ஆயிரம் வரை விவசாயிகள் செலவு செய்துள்ள நிலையில், விளைந்த நெல் பயிரை அறுவடை செய்ய முடியாமல் பரிதவிக்கின்றனா். எனவே, இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com