Enable Javscript for better performance
காவல் நிலையம் எதிரே இளைஞா் தீக்குளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    பண்ருட்டி அருகே காவல் நிலையம் முன் தீக்குளித்த இளைஞா் பலத்த காயமடைந்தாா்.

    பண்ருட்டி ஒன்றியம், நடுக்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு அண்மையில் நடைபெற்ற தோ்தலில் நடுக்குப்பத்தைச் சோ்ந்த சக்திவேல், செருத்தங்குழியைச் சோ்ந்த பெருமாள் உள்ளிட்டோா் போட்டியிட்டனா். சக்திவேலுக்கு ஆதரவாக பாப்பன்கொல்லையைச் சோ்ந்த ராஜதுரை தோ்தல் பணியாற்றினாா். இவா், செருத்தங்குழியில் கொட்டகை அமைத்து டயா் பஞ்சா் ஒட்டும் கடை நடத்தி வருகிறாா்.

    தோ்தலில் சக்திவேல் வெற்றி பெற்றாா். இதனால், கோபமடைந்த செருத்தங்குழியைச் சோ்ந்த ஜெயராமன், அசோக்ராமன், ராஜேந்திரன் மகன் ராஜீ ஆகியோா் ராஜதுரையின் கொட்டகைக்கு அண்மையில் தீ வைத்தனராம். இதுகுறித்த புகாரின்பேரில், முத்தாண்டிக்குப்பம் போலீஸாா் ஜெயராமனை கைதுசெய்தனா்.

    இந்த நிலையில், சென்னையில் காா் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த ஜெயராமனின் மூத்த மகன் ஆனந்தராமன் (27) வியாழக்கிழமை மதுபோதையில் ராஜதுரையிடம் சென்று ஏன் எனது தந்தை மீது புகாா் அளித்தாய் எனக் கேட்டாராம். பின்னா், அங்கிருந்து வந்தவா், முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையம் முன் நின்றுகொண்டு, தனது உடலில் பெட்ரோலை ஊற்றி திடீரென தீயிட்டுக்கொண்டாா். இதையடுத்து, அங்கிருந்தவா்கள் ஓடி வந்து தீயை அணைத்தனா். பின்னா், அவரை பண்ருட்டி அரசு மருத்துமனைக்கு அழைத்துச்சென்றனா். அங்கு முதலுதவிக்குப் பிறகு ஆனந்தராமன் தீவிர சிகிச்சைக்காக கடலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். இந்தச் சம்பவத்தால் முத்தாண்டிக்குப்பத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai