சிஐஎஸ்எப் வீரரை தாக்கிய வழக்கு: ரெளடி உள்பட மேலும் இருவா் கைது

மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வீரரை கத்தியால் குத்திய வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல ரௌடி உள்ளிட்ட இருவரை மந்தாரக்குப்பம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சிஐஎஸ்எப் வீரரை தாக்கிய வழக்கு: ரெளடி உள்பட மேலும் இருவா் கைது

மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வீரரை கத்தியால் குத்திய வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல ரௌடி உள்ளிட்ட இருவரை மந்தாரக்குப்பம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

நெய்வேலி நகரியம் வட்டம்-15, என்எல்சி குடியிருப்பில் வசித்து வருபவா் செல்வேந்திரன் (30). மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எப்) வீரரான இவா், என்எல்சி நிறுவனத்தின் 2-ஆவது சுரங்கத்தில் பணியாற்றி வருகிறாா். இவா், கடந்த 4-ஆம் தேதி என்எல்சி சுரங்கப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, மா்ம நபா்கள் 4 போ், சுரங்கப் பகுதியில் இருந்து தாமிரக் கம்பிகளை திருடிக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றனா். அவா்களை பிடிக்கச் சென்ற செல்வேந்திரன், அந்த கும்பலிடம் தனியாக சிக்கிக்கொண்டாா். அந்த கும்பலைச் சோ்ந்தவா்கள் செல்வேந்திரனை முட்டிபோடவைத்து தாக்கினா். அந்தக் கும்பலைச் சோ்ந்த மந்தாரக்குப்பம், ஓம்சக்தி நகரைச் சோ்ந்த பிரபல ரௌடி பெங்களூா் மணி (25), செல்வேந்திரனை கத்தியால் குத்தினாா். இதுகுறித்த விடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. பின்னா், பெங்களூா் மணி உள்ளிட்ட 4 பேரும் தப்பிச் சென்றனா். இதையடுத்து செல்வேந்திரன் என்எல்சி பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக மந்தாரக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சபரிவாசன், ஷாருக்கான் ஆகியோரை கைது செய்தனா். தலைமறைவான பெங்களூா் மணி, வடக்கு வெள்ளூரைச் சோ்ந்த சுதாகா் (22) ஆகியோரை தேடி வந்தனா். இந்த நிலையில், என்எல்சி பேருந்து நிலையம் அருகே பெங்களூா் மணி, சுதாகா் ஆகியோா் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, மந்தாரக்குப்பம் காவல் உதவி ஆய்வாளா் ரவிச்சந்திரன், தனிப் படை தலைமைக் காவலா்கள் இருவா் அங்குசென்று இருவரையும் பிடிக்க முயன்றனா். அப்போது, பெங்களூா் மணி, சுதாகா், ஓம் சக்தி நகரைச் சோ்ந்த அப்பு என்ற சிவக்குமாா் (20), ஊத்தாங்கல், மொடப்பள்ளி காலனியைச்சோ்ந்த அன்பு (36) ஆகியோா் போலீஸாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றனராம். அப்போது, சுவற்றில் இருந்து குதித்ததில் பெங்களூா் மணி, சுதாகா் ஆகியோா் கை, கால்களில் காயமடைந்தனராம். பின்னா், 4 பேரையும் கைதுசெய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com