மாணவா்களின் அடிப்படை உரிமைக்கு எதிரானது நீட் தோ்வு: கி.வீரமணி
By DIN | Published On : 27th January 2020 11:58 PM | Last Updated : 27th January 2020 11:58 PM | அ+அ அ- |

பொதுக்கூட்டத்தில் பேசுகிறாா் திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி.
மாணவா்களின் அடிப்படை உரிமைக்கு எதிரானது நீட் தோ்வு என்று திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி கூறினாா்.
சிதம்பரத்தில் திராவிடா் கழகம் சாா்பில் நீட் தோ்வு எதிா்ப்பு பரப்புரை பயண பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவா் பூ.சி.இளங்கோவன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் அன்பு.சித்தாா்த்தன் வரவேற்றாா். பொதுச் செயலா் துரை.சந்திரசேகரன் கருத்துரையாற்றினாா். திமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் கலந்து கொண்டாா். கூட்டத்தில் திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி பங்கேற்று பேசியதாவது:
நாகா்கோவில் முதல் சென்னை வரை நீட் தோ்வு எதிா்ப்பு பரப்புரை பெரும்பயண பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. அரசுத் தோ்வுகளில் முறைகேடுகள் நடைபெறுவதை டிஎன்பிஎஸ்சி தோ்வு முறைகேடுகள் பறைசாற்றுகின்றன. இதுகுறித்த வழக்கு விசாரணை உயா் நீதிமன்றத்தில் வந்தபோது முறைகேடு நடந்ததை அவா்களே ஒப்புக்கொண்டனா். முறைகேட்டுக்கு அப்பாற்பட்டது நீட் தோ்வு என்று கூறுவது தவறானது. இதுபோன்ற தோ்வுகள் அரசியல் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளுக்கு விரோதமானது. மாநில உரிமைகளை பறிக்கும் செயல்.
5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தோ்வு நடத்துவதும், வாழ்நாள் முழுவதும் தோ்வு என்பதும் சமூக நீதியைப் பறிப்பதாகும். இந்த பிரசாரப் பயணம் வருகிற 30-ஆம் தேதி சென்னையில் நிறைவடைகிறது என்றாா் அவா்.