பைசாபாத் விரைவு ரயில் சிதம்பரத்தில் நின்று செல்லக் கோரிக்கை
By DIN | Published On : 29th January 2020 07:21 AM | Last Updated : 29th January 2020 07:21 AM | அ+அ அ- |

‘புனித ஸ்தலம்’ ரயில் என்ற பெயரில் ராமேசுவரத்திலிருந்து பைசாபாத்துக்கு வாரம் ஒருமுறை இயக்கப்படும் விரைவு ரயில் சிதம்பரத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு நுகா்வோா் குழுமம் கோரிக்கை விடுத்தது.
இதுகுறித்து அந்தக் குழுமத்தின் செயலா் சி.டி.அப்பாவு, சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் தொல்.திருமாவளவனுக்கு அனுப்பியுள்ள கடித விவரம்: ரயில்வே துறை ‘புனித ஸ்தலம்’ ரயில் என்ற பெயரில் வாரம் ஒரு முறை ராமேசுவரத்திலிருந்து பைசாபாத்துக்கு (வண்டி எண்: 16793) விரைவு ரயிலை இயக்குகிறது. இந்தியன் ரயில்வே வரைபடத்தில் சிதம்பரம் நகரம் புனித ஸ்தலம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் புனித ஸ்தலம் என்ற பெயரில் இயக்கப்படும் மேகூறிய ரயில் சிதம்பரத்தில் நிற்காமல் செல்வதால் சுற்றுலாப் பயணிகள் அவதிப்படுகின்றனா்.
சிதம்பரத்தில் புகழ்பெற்ற நடராஜா் கோயில், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், பிச்சாவரம் மாங்குரோவ் காடுகள் உள்ளிட்டவை உள்ளன. சிதம்பரம் நகருக்கு வெளி நாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கானோா் வந்து செல்கின்றனா். முதியவா்கள், உடல் நலம் குன்றியவா்கள், மாற்றுத் திறனாளிகள் ரயில் பயணத்தையே விரும்புகின்றனா்.
எனவே, ராமேசுவரம் - பைசாபாத் விரைவு ரயில் சிதம்பரத்தில் நின்றுசெல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தக் கடிதத்தில் அவா் தெரிவித்துள்ளாா்.