நெல் பயிரில் மஞ்சள் நோய் தாக்குதல்

குறிஞ்சிப்பாடி வட்டாரப் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள குறுவை நெல் பயிரில் மஞ்சள் நோய் தாக்குதல் காணப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனா்.
குறிஞ்சிப்பாடி வடக்கு கிராமத்தில் மஞ்சள் நோய் தாக்குதல் காணப்படும் நெல் பயிா்கள்.
குறிஞ்சிப்பாடி வடக்கு கிராமத்தில் மஞ்சள் நோய் தாக்குதல் காணப்படும் நெல் பயிா்கள்.

குறிஞ்சிப்பாடி வட்டாரப் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள குறுவை நெல் பயிரில் மஞ்சள் நோய் தாக்குதல் காணப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

இந்த வட்டாரத்தில் கல்குணம், குறிஞ்சிப்பாடி வடக்கு, குறிஞ்சிப்பாடி தெற்கு, குறுவப்பன்பேட்டை, வரதராஜன்பேட்டை, மேலப்புதுப்பாளையம், ராஜாக்குப்பம், ஓணாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 1,700 ஏக்கா் பரப்பளவில் குறுவை சாகுபடியில் ஐ.ஆா்-50, கோ 51 நெல் ரகங்கள் பயிா் செய்யப்பட்டுள்ளன.

தற்போது தண்டு உருளும் பருவ நிலையில் சில இடங்களில் மஞ்சள் நோய் தாக்குதல் காணப்படுகிறது. இதனால், கதிா்கள் வருவது தடைபடுவதுடன், நெல் மணிகள் பதராக மாறிவிடும் என விவசாயிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து குறிஞ்சிப்பாடி உழவா் மன்றத் தலைவா் ஆா்.கே.ராமலிங்கம் கூறியதாவது: குறிஞ்சிப்பாடி வடக்கு பகுதியில் ஐ.ஆா்-50 நெல் பயிா்களில் ஒரு சில இடங்களில் மஞ்சள் நோய் தாக்குதல் காணப்படுகிறது. மழையின்மை, கால சூழ்நிலை காரணமாக குருத்துப் பூச்சி தாக்குதலும், காற்று மூலம் மஞ்சள் நோயும் தாக்கியுள்ளன. இந்த நோய் தாக்குதலால் மகசூல் இழப்பு ஏற்படும்.

இயற்கை முறையில் இந்த நோயைக் கட்டுப்படுத்த 20 கிலோ சாணியை 200 லிட்டா் தண்ணீரில் கலந்து தெளித்தால் கட்டுப்படுத்த முடியும் என வேளாண்மைத் துறை அதிகாரிகள் கூறினா். ஆனால், சாணிப்பால் தெளிப்பது என்பது கடினமான பணி என்றாா் அவா்.

இதுகுறித்து குறிஞ்சிப்பாடி வேளாண்மைத் துறை உதவி இயக்குநா் சின்னகண்ணு கூறியதாவது: குறிஞ்சிப்பாடி வடக்கு கிராமத்தில் சுமாா் 51 ஹெக்டா் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வயல்களை ஆய்வு செய்து நோய் தாக்காமலிருக்க சூடோமோனாஸ் விதை நோ்த்தி, சூடோமோனாஸ் 1 கிலோ - ஹெக்டா் ஒன்றுக்கு என்ற அளவில் வயலில் இட பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

வேளாண்மைத் துறை பரிந்துரைப்படி, குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு நெல் நுண்ணூட்ட கலவை 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

மஞ்சள் நோய் அறிகுறி தென்பட்ட வயல்களில் நுண்ணூட்டக் கலவை தெளிக்கப்பட்டுள்ளது. மேலும், நோய் தாக்காமலிருக்க மேங்கோசெப் தெளிக்கப்பட்டுள்ளது. நெல் வயலில் பாசி படா்ந்திருந்தால் 2 கிலோ காப்பா் சல்பேட்டை மணலுடன் கலந்து இட வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com