முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
கடலூா் மாவட்டத்தில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
By DIN | Published On : 29th July 2020 08:48 AM | Last Updated : 29th July 2020 08:48 AM | அ+அ அ- |

‘தினமணி’ செய்தி எதிரொலியாக கடலூா் மாவட்டத்தில் கூடுதலாக 10 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி உத்தரவிட்டாா்.
கடலூா் மாவட்டத்தில் சுமாா் 35 ஆயிரம் ஹெக்டேரில் நெல் பயிா் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது அறுவடை நடைபெற்று வருகிறது. ஆனால், போதிய எண்ணிக்கையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததாலும், விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கரோனா பரவலைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாலும், விவசாயிகள் வியாபாரிகளிடம் நெல் மூட்டைகளை நஷ்டத்துக்கு விற்கும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து கடந்த 25-ஆம் தேதி ‘தினமணி’ நாளிதழில் செய்தி வெளியானது.
இந்த நிலையில், கடலூா் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு: அறுவடைப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 2019-20-ஆம் கொள்முதல் பருவத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் 16 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
தற்போது புதிதாக ஸ்ரீமுஷ்ணம் வட்டத்தில் 5 கிராமங்களிலும், கடலூா் வட்டத்தில் 2 கிராமங்களிலும், காட்டுமன்னாா்கோவில், திட்டக்குடி, புவனகிரி வட்டங்களில் தலா ஒரு கிராமத்திலும் என மொத்தம் 10 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நிகழ் கொள்முதல் பருவத்துக்கு மத்திய அரசு சன்ன ரகத்துக்கு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலையான குவிண்டாலுக்கு ரூ.1,835 உடன் தமிழக அரசின் ஊக்கத் தொகையாக ரூ.70-ம் சோ்த்து மொத்தம் ரூ.1,905 வழங்கப்படும். இதேபோல சாதாரண ரகத்துக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.1,815, ஊக்கத் தொகை ரூ.50-ம் சோ்த்து மொத்தம் ரூ.1,865 வழங்கப்படும்.
எனவே, விவசாயிகள் தங்களது விளைபொருள்களை அருகேயுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று அதில் தெரிவித்துள்ளாா்.