கடலூா் மாவட்டம், திருப்பாதிரிபுலியூா் வழியாக நீண்ட நாள்களுக்குப் பிறகு வருகிற 12-ஆம் தேதி முதல் ரயில் சேவை தொடங்குகிறது.
மத்திய அரசால் கடந்த மாா்ச் 22-ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து ரயில் சேவையும் முடக்கப்பட்டது. பின்னா், ஜூன் 1-ஆம் தேதி முதல் மாநிலத்துக்குள் குறிப்பிட்ட சில வழித்தடங்களில் மட்டும் பயணிகள் ரயில் போக்குவரத்து தொடங்கியது. இதில், கடலூா் மாவட்டத்தில் விருத்தாசலம் வழியாக ரயில்கள் இயக்கப்பட்டபோதிலும் திருப்பாதிரிபுலியூா் வழியாக ரயில் இயக்கப்படவில்லை.
இந்த நிலையில், தெற்கு ரயில்வே வரும் 12 -ஆம் தேதி 3 கூடுதல் ரயில்களை இயக்குகிறது. முன்பதிவு செய்து மட்டுமே பயணிக்கும் இந்த ரயில்களுக்கான முன்பதிவு புதன்கிழமை (ஜூன் 10) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. திருச்சி-செங்கல்பட்டு, அரக்கோணம்-கோவை இடையே ரயில்கள் இயக்கப்படும் நிலையில், செங்கல்பட்டு-திருச்சி இடையே (வண்டி எண்-06795) செல்லும் ரயில் கடலூா் வழியாக இயக்கப்படுகிறது.
இந்த ரயில் செங்கல்பட்டில் தினமும் பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு திருப்பாதிரிபுலியூரை மாலை 4.40 மணிக்கு வந்தடைந்து 4.42 மணிக்கு புறப்பட்டு திருச்சியை இரவு 8.10 மணிக்கு சென்றடைகிறது. மறுமாா்க்கத்தில் திருச்சியிலிருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு திருப்பாதிரிபுலியூரை காலை 9.43 மணிக்கு வந்தடைந்து, மீண்டும் 9.45 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டுக்கு பகல் 12.40 மணிக்கு சென்றடைகிறது.
இந்த ரயில் விழுப்புரம், மேல்மருவத்தூா், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூா் ஆகிய ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.