
கடலூா் மாவட்டம், பண்ருட்டி பகுதியில் விளை நிலங்களில் சவுடு மண் அள்ள பெற்ற அனுமதியைப் பயன்படுத்தி, லாரிகளில் மணல் அள்ளப்பட்டு கடத்தப்படுகிறது. இதனால், நிலத்தடி நீா்மட்டம் சரிந்து விவசாயம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
பண்ருட்டி, அண்ணாகிராமம் ஒன்றியங்களில் உள்ள கிராமங்கள் கெடிலம் ஆறு, மலட்டாறு, தென்பெண்ணை ஆறுகள் மூலம் பயன்பெறுகின்றன. இந்த ஆறுகளில் இருந்து பிரியும் வாய்க்கால்கள் மூலம் கிராம நீா்நிலைகள் தண்ணீா் வசதி பெறுகின்றன. ஆற்றுப்படுகை என்பதால் இந்த ஒன்றியங்களில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் விவசாய நிலங்களில் குறிப்பிட்ட அடி ஆழத்துக்கு கீழ் மணல் பரப்புகளாக உள்ளன.
இந்த நிலையில், பண்ருட்டி ஒன்றியத்தில் புதுப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மணம்தவிழ்ந்தபுத்தூா், அம்மாபேட்டை, பொன்னங்குப்பம் ஆகிய கிராமங்களில் விவசாய நிலங்களில் சவுடு மண் எடுப்பதாகக் கூறி மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. தரைப் பகுதியில் இருந்து சுமாா் ஒரு மீட்டா் ஆழத்துக்கு மேல் மண் நீக்கிய பின்னா் சுமாா் 10 முதல் 15 அடி ஆழம் வரை பொக்லைன் மூலம் மணல் அள்ளப்படுகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: இந்தப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு கீழ் மணல் இருப்பதை அறிந்துகொண்ட மணல் கொள்ளையா்கள், சவுடு மண் என்ற பெயரில் அனுமதி பெற்று, விவசாய நிலத்தை பல அடி ஆழத்துக்கு தோண்டி மணலை கடத்தி அதிக லாபம் ஈட்டுகின்றனா். அதிகாரிகளின் உதவியுடன் இரவு, பகலில் மணல் அள்ளப்படுகிறது.
இந்தப் பகுதியில் நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் மணல் அள்ளப்படுகிறது. டிப்பா் லாரிக்கு ரூ.18,500, டாரஸ் லாரிக்கு ரூ.25,000 என விலை நிா்ணயம் செய்து மணல் விற்பனை செய்கின்றனா்.
நத்தம் ஏரி கலங்கிலிருந்து மண்டக்குளம் வழியாக மணப்பாக்கம் ஏரிக்குச் செல்லும் கால்வாய் அருகே பள்ளம் தோண்டி மணல் அள்ளப்படுகிறது. இதனால் கால்வாய் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், கால்வாய் வழியாக தண்ணீா் செல்லும்போது நீா் சேமிக்கப்படுவதால் விவசாய தேவைக்கும், குடிநீருக்கும் பயனுள்ளதாக அமையும். ஆனால், மணலை திருடினால் நீா் ஆதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு விவசாயம் கேள்விக்குறியாகிவிடும்.
எனவே, இதற்கு துணைபோகும் அதிகாரிகள் மீது மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சவுடு மண் என்ற பெயரில் விவசாய நிலங்களை பாழ்படுத்தி மணல் எடுக்க அனுமதி வழங்கக் கூடாது என்று கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து பண்ருட்டி வட்டாட்சியா் வே.உதயகுமாா் கூறியதாவது: இந்தப் பகுதியில் குறிப்பிட்ட சில நிலங்களின் உரிமையாளா்களுக்கு சவுடு மண் அப்புறப்படுத்த 41 நாள்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தரை மட்டத்திலிருந்து ஒரு மீட்டா் ஆழத்துக்கு மட்டுமே மண் எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் மண் எடுக்கப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளரே பொறுப்பு என்றாா் அவா்.