
இடதுசாரிக் கட்சிகள் சாா்பில் சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா்.
பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக நிவாரணம் வழங்க மத்திய அரசு மறுத்து வருவதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டினாா்.
பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரண நிதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இடதுசாரிக் கட்சிகள் சாா்பில் நாடு தழுவிய போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிதம்பரம் நகரச் செயலா் ராஜா தலைமை வகித்தாா். இதில் கலந்துகொண்ட கே.பாலகிருஷ்ணன், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் 1,500 மையங்களில் போராட்டம் நடத்தி வருகிறோம். பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு தலா ரூ.7,500, மாநில அரசு தலா ரூ.5,000 வீதம் 6 மாதங்களுக்கு வழங்க வேண்டும். இல்லையெனில், பட்டினிச் சாவுகள் அதிகரிக்கும்.
தமிழகத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் சூழலில், தனியாா் மருத்துவமனைகள் அனைத்தையும் அரசு கையகப்படுத்தி சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் மாதங்களில் கரோனா தொற்றால் மேலும் அதிகமானோா் பாதிக்கப்பட வாய்ப்புள்ள சூழ்நிலையில், அதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
இந்த இக்கட்டான சூழலில் மருத்துவா்கள், காவல் துறையினா், தூய்மைப் பணியாளா்கள் அா்ப்பணிப்பு உணா்வுடன் பணிபுரிந்து வருகின்றனா். அவா்களுக்கு உரிய பொருளாதார உதவிகளைச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லை. அரசு மருத்துவமனைகளில் 8,500-க்கும் மேற்பட்ட செவிலியா்கள் தற்காலிக ஊழியா்களாக உள்ளனா். அவா்களை இன்னும் பணி நிரந்தரம் செய்யவில்லை.
பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக நிவாரணம் வழங்க மத்திய அரசு மறுத்து வருகிறது. கரோனாவுக்கான சிறப்பு நிதியையும் தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கவில்லை என்றாா் அவா்.
ஆா்ப்பாட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் மூசா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் தமிமுன்அன்சாரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.