நாளை சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன தரிசன உத்சவ கொடியேற்றம்: பக்தர்கள் அனுமதியில்லை

பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன தரிசன உத்சவம் (ஜூன் 19) வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. 
நாளை சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன தரிசன உத்சவ கொடியேற்றம்: பக்தர்கள் அனுமதியில்லை

பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன தரிசன உத்சவம் (ஜூன் 19) வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. 

ஊரடங்கை முன்னிட்டு பக்தர்கள் அனுமதியின்றி கோயிலுக்குள்ளேயே திருவிழா நடத்தப்படுகிறது. ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தி வீற்றுள்ள சித்சபை எதிரே உள்ள கொடிமரத்தில், பஞ்சமூர்த்திகள் முன்னிலையில், சுவாமியின் பிரதிநிதியான ஹஸ்தராஜரை முன்னிறுத்தி ஆவாஹணம் செய்து செவ்வாய்க்கிழமை காலை 6.00 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் உற்சவ ஆச்சாரியார் பி.கங்காதர தீட்சிதர் கொடியை ஏற்றி வைக்கிறார். உற்சவம் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது. உத்சவ விபரம் வருமாறு: ஜூன் 20- வெள்ளி சந்திர பிறை வாகன வீதிஉலா, 21-ம் தேதி தங்க சூரிய பிறை வாகன வீதிஉலா, 22-ம் தேதி வெள்ளி பூதவாகன வீதிஉலா, 23-ம் தேதி வெள்ளி ரிஷப வாகன வீதிஉலா (தெருவடைச்சான்), 24-ம் தேதி வெள்ளி யானை வாகன வீதிஉலா, 25-ம் தேதி தங்க கைலாச வாகன வீதிஉலா, 26-ம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதிஉலாவும் நடைபெறுகிறது. 

கரோனா ஊரடங்கை முன்னிட்டு சுவாமி வீதிஉலா கோயில் உள்பிரகாரத்திலேயே நடைபெறுகிறது. தேரோட்டம் கிடையாது. ஜூன் 27-ம் தேதி சனிக்கிழமை இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது. ஜூன் 28-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசியபூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது.  உற்சவ ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்கள் செய்துள்ளனர்.  

கோயிலுக்குள்ளேயே திருவிழா: கரோனா தொற்று பரவாமல் இருக்க தமிழகஅரசின்  ஊரடங்கை முன்னிட்டு கோயில் திருவிழா கோயிலுக்குள்ளேயே நடத்த கடலூர் மாவட்ட நிர்வாகம்  முடிவு செய்து அறிவித்துள்ளது. மேலும் பக்தகளுக்கு அனுமதி கிடையாது என அறிவித்துள்ளது. கோயிலுக்குள்ளேயே திருவிழா நடத்தப்படுவதால் தேரோட்டம், முத்துப்பல்லக்கு மற்றும் வீதி உலா கிடையாது என்றும், தினந்தோறும் சாமி வீதிஉலா கோயில்  உள் பிரகாரத்திலேயே நடைபெறும் என தீட்சிதர்கள் தெரிவித்தனர். கோயில் உற்தவத்தை முன்னிட்டு சிதம்பரம் டிஎஸ்பி எஸ்.கார்த்திகேயன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சி.முருகேசன் மற்றும் போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். 

மேலும் நடராஜர் கோயில் மேற்கு கோபுர வாயில், தெற்கு கோபுர வாயில், வடக்கு கோபுர வாயில்கள் அடைக்கப்பட்டு, பிரதான வாயிலான கிழக்கு கோபுர வாயில் வழியாக கோயிலுக்குள் தீட்சிதர்கள் மட்டும் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு கோபுர வாயிலில் போலீஸார் சோதனையிட்டு 150 தீட்சிதர்களை மட்டும் கோயிலுக்குள் அனுமதிக்க முடிவு செய்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com