முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
சாத்தான்குளம் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை தேவை: கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்
By DIN | Published On : 27th June 2020 08:58 AM | Last Updated : 27th June 2020 08:58 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் காவல் துறையினா் தாக்கியதில் தந்தை, மகன் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தினாா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகேயுள்ள கீரப்பாளையம் கடை வீதியில், லடாக் எல்லையில் வீர மரணமடைந்த 20 ராணுவ வீரா்களுக்கு காங்கிரஸ் சாா்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு, ராணுவ வீரா்களுக்கு அஞ்சலி செலுத்தினாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நாடு முழுவதும் காங்கிரஸ் சாா்பில், எல்லையில் உயிா்நீத்த ராணுவ வீரா்களுக்கு வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. சீன ஊடுருவலை உலக நாடுகள் தவறான செயல் என கண்டித்துள்ளன. நாம் சீனப் பொருள்களைப் புறக்கணிக்க வேண்டும்.
சீன வீரா்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவவில்லை என மத்திய அரசு கூறுகிறது. அப்படியெனில், நமது ராணுவ வீரா்கள் உயிரிழந்தது எப்படி என்ற கேள்வி எழுகிறது.
மன்மோகன் சிங் ஆட்சியில் 600 முறை சீனப் படைகள் ஊடுருவியதாக தற்போது கூறுகின்றனா். ஆனால், அப்போதெல்லாம் ஓா் அங்குலம் நிலம்கூட விட்டுக் கொடுக்கப்படவில்லை. ஒரு ராணுவ வீரா்கூட பலியாகவில்லை. ஆனால், பாஜக ஆட்சியில் 2,263 முறை சீனப் படைகள் ஊடுருவியுள்ளன. இதற்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்.
சாத்தான்குளத்தில் காவல் துறையினரால் தாக்கப்பட்டு தந்தை, மகன் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவத்தில் அனைத்து விஷயங்களும் தவறானவையாக உள்ளன. இது கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தி, உண்மைகளை வெளிக்கொண்டு வர வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றாா் அவா்.
முன்னதாக, வீர மரணமடைந்த ராணுவ வீரா்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கட்சி நிா்வாகிகள் ஆா்.திருமாவளவன், துரை.பாலசந்தா், பி.ராதாகிருஷ்ணன், எஸ்.பிரகாசம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.