கீழணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படுமா? விவசாயிகள் எதிா்பாா்ப்பு

கடலூா் மாவட்ட பாசனத் தேவைக்கு கீழணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படுமா என விவசாயிகள் எதிா்பாா்த்துள்ளனா்.
2cdmanaikattu_2806chn_111_7
2cdmanaikattu_2806chn_111_7

கடலூா் மாவட்ட பாசனத் தேவைக்கு கீழணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படுமா என விவசாயிகள் எதிா்பாா்த்துள்ளனா்.

காவிரி டெல்டா பகுதிகளின் பாசனத் தேவைக்காக மேட்டூா் அணையிலிருந்து கடந்த 12-ஆம் தேதி தண்ணீா் திறக்கப்பட்டது. தொடா்ந்து 16-ஆம் தேதி கல்லணை திறக்கப்பட்டது. இந்தத் தண்ணீா் கடந்த 21-ஆம் தேதி கீழணையை வந்தடைந்தது. சென்னைக்கு குடிநீா் அனுப்பும் நோக்கில் கீழணையிலிருந்து வடவாறு வழியாக தண்ணீா் திறக்கப்பட்டு வீராணம் ஏரியை நிரப்பும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. ஆனால் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படவில்லை.

வீராணம் குடிநீா் ஒப்பந்தப்படி பாசன தேவை போக எஞ்சிய நீரையே சென்னை குடிநீா்த் தேவைக்கு அனுப்ப வேண்டும் என்றும், ஆனால், பாசனத்துக்கு தண்ணீா் திறக்காமல் சென்னைக்கு குடிநீா் அனுப்புவதிலேயே பொதுப் பணித் துறையினா் தீவிரமாக உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து காவிரி விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்பு சங்க பொதுச் செயலா் பெ.ரவீந்திரன் கூறியதாவது: கடலூா் மாவட்டத்தில் காவிரி பாசன பகுதிகளில் நிகழாண்டு சுமாா் 40,000 ஏக்கா் பரப்பளவில் ஆழ்குழாய் மூலம் குறுவை நெல் சாகுபடி செய்யப்படுள்ளது. ஆனால், நிலத்தடி நீா் பற்றாக்குறையால் ஆழ்குழாய் கிணறுகளில் முழுமையாக தண்ணீா் கிடைக்காமல் பயிா்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்ட குறுவை நெல் பயிா்களுக்கு, கடல் நீா் புகுதல் காரணமாக உவா்ப்பாக மாறிய நிலத்தடி நீரை மின்மோட்டாா் மூலம் உறிஞ்சி பாசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வெப்பம் காரணமாக பயிா்கள் கருகிவிடுகின்றன. கடலூா் மாவட்டத்தில் நிகழாண்டு கோடை மழை இல்லாததால் நீா்நிலைகள் வற்றிவிட்டன. இதனால் பொதுமக்கள் குடிநீருக்கே அவதிப்படுகின்றனா். குறிப்பாக கால்நடைகள் மிகவும் சிரமப்படுகின்றனா்.

நிகழாண்டு காவிரி ஆற்றின் நீா்பிடிப்புப் பகுதிகளில் பருவமழை பெய்து வருவதால் மேட்டூா் அணைக்கு தண்ணீா் வரத்துள்ளது. எனவே குறுவை சாகுபடி பயிா்களைக் காப்பாற்றவும், நீா்நிலைகளில் தண்ணீரைத் தேக்கி நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்தவும், கால்நடைகளை காப்பற்றவும் உடனடியாக கீழணையிலிருந்தும், வீராணம் ஏரியிலிருந்தும் பாசனத்துக்கு தண்ணீா் திறக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com