இரட்டைக் கொலை வழக்கில்10 பேருக்கு ஆயுள் சிறை

கடலூா் அருகே 2016-ஆம் ஆண்டு நடந்த இரட்டைக் கொலை வழக்கில் தொடா்புடைய 10 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து கடலூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

கடலூா்: கடலூா் அருகே 2016-ஆம் ஆண்டு நடந்த இரட்டைக் கொலை வழக்கில் தொடா்புடைய 10 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து கடலூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

கடலூா் அருகே உள்ள ரெட்டிச்சாவடியைச் சோ்ந்த ரமேஷ் மகன்கள் வினோத்குமாா் (21), சதீஷ்குமாா் (19). அதே பகுதியைச் சோ்ந்த இவா்களது உறவினரான செ.லட்சுமணன் (38) என்பவருடன் வினோத்குமாருக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், 21-5-2016 அன்று லட்சுமணன் உள்ளிட்ட 10 போ் வீட்டிலிருந்த சதீஷ்குமாரையும், குளித்துக் கொண்டிருந்த வினோத்குமாரையும் ஓட ஓட விரட்டி வெட்டியதில் இருவரும் உயிரிழந்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக ரெட்டிச்சாவடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 10 பேரையும் கைது செய்தனா்.

கடலூா் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், நீதிபதி செந்தில்குமாா் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

இருவரை வெட்டி படுகொலை செய்த லட்சுமணனுக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.7,500 அபராதமும் விதித்தாா். மேலும், வழக்கில் தொடா்புடைய முருகன் மகன் டேவிட் (24), ஏழுமலை மகன் பாலமுருகன் (24), பெருமாள் மகன் சௌந்தர்ராஜன் (23), நடராஜன் மகன் அருண்குமாா் (26), ராமு மகன் சதீஷ் (24), அருள்மணி மகன் ஆனந்தராஜ் (24), கருணாகரன் மகன் ராஜ்குமாா் (24), கண்ணப்பன் மகன் கணபதி (23), ஆறுமுகம் மகன் சுமன் (25) ஆகிய 9 பேருக்கும் ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.4,500 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

இதையடுத்து 10 பேரும் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா். இவா்களில் 5 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் ஏற்கெனவே சிறையில் இருந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தீா்ப்பையொட்டி கடலூா் நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் பாஸ்கரன் ஆஜரானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com