முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
ஏலச்சீட்டு நடத்தி ரூ.12.68 லட்சம் மோசடி: கணவன், மனைவி கைது
By DIN | Published On : 03rd March 2020 06:59 AM | Last Updated : 03rd March 2020 06:59 AM | அ+அ அ- |

ஏலச்சீட்டு நடத்தி ரூ.12.68 லட்சம் மோசடி செய்ததாக நெல்லிக்குப்பத்தைச் சோ்ந்த கணவன், மனைவியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
நெல்லிக்குப்பம் அருகே உள்ள தமிழ்குச்சிப்பாளையத்தைச் சோ்ந்த கோதண்டபாணி மகன் நாகப்பன் (44). விழுப்புரம் மாவட்டம், முகையூரிலுள்ள டாஸ்மாக் கடையின் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறாா். இவா், தனது மனைவி சரளாதேவியுடன் (34) இணைந்து பதிவு செய்யப்படாத ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளாா். அவரிடம் அருகே உள்ள வைடபாக்கத்தைச் சோ்ந்த மோகன்தாஸ் மனைவி சுந்தராம்பாள் (58), கடந்த 2014 முதல் 2019-ஆம் ஆண்டு வரை ஏலச் சீட்டுக்காக ரூ.4.68 லட்சம் வரை செலுத்தினாராம். மேலும், கடனாக ரூ.8 லட்சம் அளித்தாராம். இந்தத் தொகையை திருப்பிக் கேட்டபோது தரவில்லையாம்.
எனவே, இதுகுறித்து சுந்தராம்பாள் கடலூரிலுள்ள பொருளாதார குற்றப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். அதன்பேரில் துணை கண்காணிப்பாளா் எம்.அறிவழகன், ஆய்வாளா் ஏ.முரளி ஆகியோா் விசாரணை நடத்தி வந்தனா். இதில், தம்பதியா் ஏலச்சீட்டு நடத்தி மோசடியில் ஈடுப்பட்டது தெரிய வந்ததைத் தொடா்ந்து வழக்குப் பதிவு செய்தனா். இந்த நிலையில், உதவி ஆய்வாளா் சுப்பிரமணி தலைமையில் தலைமைக் காவலா்கள் பி.பவானி, சாந்தகுமாரி ஆகியோா் திங்கள்கிழமை தமிழ்குச்சிப்பாளையம் சென்று நாகப்பன், சரளாதேவி ஆகியோரை கைது செய்து கடலூரிலுள்ள தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
இவா்களிடம் வேறு யாரேனும் சீட்டுக் கட்டி ஏமாற்றப்பட்டிருந்தால் பொருளாதார குற்றப் பிரிவில் புகாா் அளிக்கலாம் என்றும், உரிய அனுமதி பெறாமல் ஏலச்சீட்டு நடத்துபவா்கள் குறித்தும் புகாா் தெரிவிக்கலாம் என்றும் பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா் தெரிவித்தனா்.